முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
ரோஹித் சர்மா புதிய மைல்கல்: இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள்(7சிக்ஸர், 12 பவுண்டரி) சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் 32-வது சதத்தை பதிவு செய்தார்.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப்பின் ரோஹித் சர்மா பங்கேற்ற 5வது ஒருநாள் போட்டியாகும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்களை அடித்திருந்தாலும், சதம்அடிக்கவில்லை. உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தபின், ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சதம் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து: சால்ட் செய்த ‘அசால்ட்’: டி20 தொடரை வென்றது இந்திய அணி
அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் கிறிஸ் கெயில்(331) சாதனையை முறியடித்து 338 சிக்ஸர்கள் விளாசி ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிகசதங்களை விளாசிய இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா 32 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோலி 50 சதங்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும் உள்ளனர்.
ரோஹித் சிங்கத்தின் கர்ஜனை: ரோஹித் சர்மாவின் ஃபார்மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் “சைலன்ட்” ஆக்கிவிட்டார். அடுத்தவாரம் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தன்னால் அணியை வழிநடத்த தகுதி இருக்கிறது என்பதை ரோஹித் சர்மா ஒரே ஆட்டத்தில் நிரூபித்தார்.
தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அட்கின்சன் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் ரோஹித் பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். மெஹ்மூத் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்ஸர்களை வாரிக்கொடுத்துச் சென்றார்.
அதில் ரஷித் ஓவரில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். அதன்பின் பொறுமையாக ஆடிய ரோஹித் சர்மா, களத்தில் நங்கூரம் ஊன்றி, பேட் செய்யத் தொடங்கினார். 30 பந்துகளில் அரைசதம் எட்டிய ரோஹித், அடுத்த 50 ரன்களை 46 பந்துகளில் நிதானமாகச் சேர்த்து 32வது சதத்தை நிறைவு செய்தார்.

ரோஹித் சர்மா இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகி இருப்பது மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சவாலாகவும் இருக்கும். அடுத்ததாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலை விராட் கோலியின் ஃபார்ம்தான்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மான் கில் மிகுந்த பொறுப்பான ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து 2வது அரை சதத்தைப் பதிவு செய்தார். 45 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 60 ரன்கள் சேர்த்தநிலையில் ஓவர்டன் பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படுவாரா என்று சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் அவர் தனக்குகிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஸ்ரேயாஸ் ஏற்படுத்தி 6 ரன்களில் 2வது அரைசதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 44 ரன்களில் ரன்அவுட் ஆகினார்.
அக்ஸர் படேல் கடந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தை நிறைவு செய்து இந்தப் போட்டியில் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அறிமுகமாகிய அக்ஸர் படேல் ஆல்ரவுண்டராக மாறிவருவது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியபின் ஜடேஜாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

துல்லியத்தன்மை, வேகமாகப் பந்துவீசுவது என ஜடேஜாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கிறது.
ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் நேற்றுவீசி முடித்தார். ஹேரி ப்ரூக்கிற்கு எதிராக ஒரு ரன்கூட வழங்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக ஜடேஜா மாற்றினார்.இந்தியத் தரப்பில் ஜடேஜா தவிர்த்து, ஷமி, ராணா, வருண், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் அருமையான தொடக்கம் அளித்தனர்.
பவர்ப்ளே முடிவில் 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் 26 , பென் டக்கெட் 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி 66 ரன்களில் பிரிந்தனர். ஹேரி ப்ரூக் 31 ரன்னில் ராணா பந்துவீ்ச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பட்லர், ஜோ ரூட்டுடன் சேர்ந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். பட்லர் 34 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது 330 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி 85 ரன்களுக்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களில் ஆட்டமிழந்தது. லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 32 பந்துகளில் 2 பெரிய சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்தார்.
பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதில் ரஷீத் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வேகப்பந்துவீச்சில் அட்கின்சன், மார்க்உட் இருவருமே ரன்களை வழங்கினர். நன்றாகப் பந்துவீசிய மெஹ்மூதுக்கு 6 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. லிவிங்ஸ்டன் மட்டும் 7 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார். மற்றவகையில் இங்கிலாந்து பந்துவீச்சில் அச்சுறுத்தல் தரும் துல்லியம், லைன்லென்த், இல்லை.
இதையும் படிங்க: ரோஹித் எடுத்த இதயத்தை உடைக்கும் முடிவு... விராட் கோலிக்காக கழற்றிவிடப்பட்ட வீரர்..!