கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2013 ஆம் ஆண்டு தான் விளையாட தொடங்கினார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரோஹித் சர்மா சதம் அடித்தார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவ.6 ஆம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் மோசமாக இருந்ததால், அவர் டெஸ்ட் அணியில் நீடிப்பது கேள்விக்குறியானது. இதேபோல் கடந்த சில போட்டிகளாக ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வந்தார். இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து அவர் சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.. ரோகித்தை விமர்சித்த முன்னாள் ஆஸி. கேப்டன்!!

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று முடிவை அறிவித்திருக்கிறார். அவர் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 116 இன்னிங்ஸ்களில் 4 ஆயிரத்து 302 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 18 அரைசதங்கள், 12 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார். அவர் அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ரோகித் சர்மா விலகி இருக்கின்றார். இதனால் ரோகித் சர்மா வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் RR... அரைசதம் விளாசிய ரோஹித்!!