மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்.. மிவி ஒன் 5ஜி விரைவில் இந்திய சந்தையில்!!
“Pretty Powerful” என்ற டேக்லைனுடன் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆடியோ தயாரிப்புகளில் பிரபலமான இந்திய நிறுவனமான மிவி, இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில் அடியெடுத்து வைக்கிறது. நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ‘மிவி ஒன் 5ஜி’ விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனைக்கு வரும்.
மிவி நிறுவனம் ஏற்கனவே இயர்போன்கள், சவுண்ட்பார்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ஹோம் தியேட்டர் சிஸ்டங்கள் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இப்போது ஸ்மார்ட்போன் பிரிவிலும் நுழைவதன் மூலம் தனது வணிகத்தை விரிவுபடுத்தவுள்ளது. பிளிப்கார்ட்டில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைப்பக்கத்திலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீசர்களிலும் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிவி ஒன் 5ஜி மாடல் 5ஜி இணைப்பு வசதியுடன் வரும். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 5ஜி சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கீக் பெஞ்ச் போன்ற தளங்களில் வெளியான தகவல்களின்படி, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்பைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. டீசர்களில் பச்சை நிறத்தில் தட்டையான பின்புறம் மற்றும் வளைந்த மூலைகளைக் கொண்ட வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது. “Pretty Powerful” என்ற டேக்லைனுடன் இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: Realme-ன் புதிய அதிரடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. 8000mAh பேட்டரி, விலை & சிறப்பம்சங்கள்!
இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்கள் செப்டம்பர் 24 அல்லது 26 தேதிகளைக் குறிப்பிட்டாலும், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலை ரூ.15,000-க்கும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சரியான விலை அறிமுகத்தின் போது தான் தெரியவரும். கூடுதலாக, இதில் க்ளீன் ஆண்ட்ராய்டு மென்பொருள் (bloatware இல்லாமல்) வழங்கப்படும் எனவும், நிறுவனம் தானே வடிவமைத்த பிசிபிஏ பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வகையிலான மாடல்கள் வரலாம் என கருதப்படுகிறது. சேவை வசதியாக 500-க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மற்றும் 19,000-க்கும் அதிகமான பின்கோடுகளுக்கு இலவச பிக் அண்ட் டிராப் சேவையும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், மிவி ஒன் 5ஜி எவ்வாறு தன்னை நிலைநிறுத்துகிறது என்பதை விரைவில் காணலாம். முழுமையான அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: iQOO Z11 வந்தாச்சு! 7,050mAh பேட்டரி, 50MP கேமரா என அசத்தல் அம்சங்கள்!