மராட்டிய மாநிலத்தில் விவசாய நிலங்களின் சட்டப் பிரச்னைகள் தொடர்பான செய்திகள் மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்திகளாக மாறி உள்ளன. இம்முறை, இந்த விவகாரத்தின் மையப் பொருளாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெயர் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அலிபாக் பகுதியில் உள்ள விவசாய நில ஒப்பந்தங்கள் குறித்த போலீஸ் புகாரில், சுஹானாவின் பெயர் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சுஹானா கான் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை, ராயகட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியில் வாங்கியுள்ளார். நிலங்களின் பத்திரப்பதிவின் போது, அவை விவசாய நோக்கத்தில் வாங்கப்படுவதாகவும், அவர் “விவசாயி” என்ற அடிப்படையில் அவற்றை வாங்கியதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் அந்த நிலங்களில் பண்ணை இல்லம் கட்டப்பட்டதாகவும், விவசாய நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே மராட்டிய மாநிலத்தின் நில சட்டங்களின்படி, விவசாய நிலங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வதற்கும் வாங்குவதற்கும் குறிப்பிட்ட சட்ட விதிமுறைகள் உள்ளன. முக்கியமாக, அந்த நபர் உண்மையில் ஒரு "விவசாயி" என்ற தகுதியை கொண்டிருக்க வேண்டியது அவசியம். இதே காரணத்துக்காகவே, பல்வேறு பிரபலங்கள் அல்லது தொழிலதிபர்கள், விவசாயி சான்றிதழ்களை வாங்குவதில் ஈடுபட்டு நிலங்களை பெற்றதற்காக முன்பும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கிலும், சுஹானா கான் “விவசாயி” எனத் தங்களை அடையாளப்படுத்தி நிலங்களை வாங்கியதாக ஆவணங்களில் தெரிவிக்கப்படுவதால், இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் சட்ட ரீதியாக ஏதேனும் தவறான நடைமுறைகளைப் பின்பற்றியதா? அல்லது சட்டப்பூர்வமாக எல்லாம் நடந்ததா என்பதை உறுதி செய்யும் நோக்கில் அதிகாரிகளுக்கு விசாரணை அறிக்கையை தயாரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நிலங்களை வாங்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், வரி பட்டியல், மைய அரசின் நில அறிக்கைகள் ஆகியவையுடன் ஒப்பீடு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நிலங்கள் இடமாற்றம் செய்யும் போது உள்ள வீதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் பரிசோதிக்கின்றனர். இப்படி இருக்க சுஹானா கான் பெயர் இவ்வாறு ஒரு சட்டவிரோத நில ஒப்பந்த வழக்கில் இடம்பெற்றது, பாலிவுட் உலகத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஹானா, சமீபத்தில் தான் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர்.
இதையும் படிங்க: நடிக்க வந்தா இப்படி தான் பண்ணுவீங்களா.. கோபப்பட்ட நடிகை சரண்யா பொன்வண்ணன்..!
தனது தந்தை ஷாருக்கானின் நிழலில் இருந்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில் இத்தகைய ஒரு குற்றச்சாட்டில் அவரது பெயர் வந்துள்ளது அவரின் நடப்பு மற்றும் எதிர்காலக் காலத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றே பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இது தொடர்பாக இன்னும் பல ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளன. வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் இந்த வழக்கு எப்படி முன்நோக்கி செல்கிறது என்பதை கணிக்க முயற்சி செய்கின்றனர். சுஹானா கான் அல்லது ஷாருக்கான் தரப்பில் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது குறித்து ஒரு தெளிவான பதிலளிப்பு எப்போது வெளிவரும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம், பிரபலங்களும், நில உரிமையும், சட்ட விதிகளும் எப்படி பிணைந்து இருக்கின்றன என்பதை மீண்டும் ஒரு முறை வெளிச்சமிடுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வழக்கு எடுத்துக்காட்டு அமைவது மிக முக்கியம்.
இதையும் படிங்க: ஒரு மனுஷனுக்கு இப்படியா சோதனை வரனும்..! ஜெயிலில் இருக்கும் நடிகை ரன்யா ராவ்-க்கு வந்த புது சிக்கல்..!