இந்திய ராணுவ வீரர்களின் தியாக வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய வெப் தொடரான ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, மறைந்த ராணுவ வீரரின் மனைவி ஆல்கா அஹுஜா பேசிய வார்த்தைகளை கேட்டு நடிகர் சித்தார்த் மேடையிலேயே கண்ணீர் விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் தொடரை இயக்குநர் ஓனி சென் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜாமி ஷெர்கில், சித்தார்த், தியா மிர்சா, பிரஜக்தா கோலி, அபய் வர்மா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு, நாட்டுக்காக அவர்கள் செய்யும் தியாகம் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. வழக்கமான சினிமா நிகழ்ச்சியைப் போல இல்லாமல், இந்த நிகழ்வில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதனால் விழாவின் சூழல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, மறைந்த ஸ்குவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் மனைவி ஆல்கா அஹுஜா கலந்து கொண்டார். அவர் மேடைக்கு வந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மேடையில் இருந்த நடிகர் சித்தார்த் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா..!! அதுவும் முதல்வர் விஜய் தலைமையில்.. நடிகர் பிரபு கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அவர்கள் வழங்கிய இந்த மரியாதை நிகழ்ச்சியில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின்னர் பேசிய நடிகர் சித்தார்த், ஆல்கா அஹுஜாவிடம் தனது நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். “ஆல்கா மேடம், உங்களிடம் அனுமதி பெறாமல் நாங்கள் இந்தத் தொடரை எடுத்திருக்க மாட்டோம். இந்த அரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு எங்கள் படக்குழு சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சாதாரணமான விஷயம் அல்ல என்றும், அதற்கு பின்னால் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும் சித்தார்த் குறிப்பிட்டார். குறிப்பாக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆல்கா அஹுஜா, தனது கணவர் அஜய் அஹுஜா குறித்து பகிர்ந்த சில வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது.
அவர் கூறியதாவது, “என்னிடம் அஜயின் வீடியோக்கள் எதுவும் நினைவாக இல்லை. ஆனால் தற்போது இந்த தொடரின் மூலம் அஜயின் ஒரு அழகான பிம்பமும், ஒரு நினைவும் எனக்கு கிடைத்துள்ளது,” என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகளை கேட்ட உடனேயே நடிகர் சித்தார்த் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே கண்ணீர் விட்டார். ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் அந்த தருணம் அவரை மிகவும் பாதித்தது.

பின்னர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்திய சித்தார்த், “நமது நாட்டில் போரில் வீர மரணம் அடைந்த தியாகிகளின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். காரணம், அவர்கள் இன்று நம்முடன் இல்லை. தங்களைப் பற்றி பேசவோ, தங்களை பாதுகாத்துக் கொள்ளவோ அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் அவர்களின் நினைவுக்கு எந்தவிதமான துரோகமும் செய்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்,” என்றார்.
மேலும், இந்த தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்தார். “இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பு, அஜய் அஹுஜாவின் மனைவி ஆல்கா மேடம் இதற்கு சம்மதம் தெரிவித்தாரா என்று நான் தயாரிப்பாளர்களிடம் கேட்டேன். அவர் சம்மதம் தெரிவித்த பிறகுதான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்று சித்தார்த் கூறினார். ஒரு வீரரின் வாழ்க்கையை கற்பனை கதாபாத்திரமாக அணுக முடியாது என்றும், அவர்களின் உண்மையான தியாகத்தையும் குடும்பத்தின் உணர்வுகளையும் மதிக்க வேண்டியது மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளன.
இதற்கிடையில், நிகழ்ச்சிக்கு நடிகர் சித்தார்த் கையில் கட்டுடன் வந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இது ஒரு சின்ன ஆபரேஷன் தான். வயசாயிடுச்சு இல்லைங்களா... அதான்,” என்று நகைச்சுவையாக கூறி சூழலை லேசாக்கினார். ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஒரு திரைப்பட நிகழ்ச்சியை விடவும் ஒரு மரியாதை செலுத்தும் நிகழ்வாகவே அமைந்தது. ராணுவ வீரர்களின் தியாகத்தை திரையில் பதிவு செய்வதில் உள்ள பொறுப்பையும், அவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், வரலாற்றையும் மனிதர்களின் உணர்வுகளையும் பதிவு செய்யும் ஒரு ஊடகம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ வெப் தொடர், ரசிகர்களிடையே எவ்வாறு வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், வெளியீட்டுக்கு முன்பே இந்த தொடரைச் சுற்றி உருவாகியுள்ள உணர்ச்சிப்பூர்வமான எதிர்பார்ப்பு, அதன் மீதான கவனத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷை பத்தி பேசலன்னா துக்காமே வராதுல்ல.. அவரு புத்திசாலியே கிடையாது..!! தேசிய விருது சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த கஸ்தூரி ராஜா..!