கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 9ம் சீசன் ரசிகர்களிடையே அதிக பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஷோ தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், போட்டியாளர்கள் அனைவரும் ‘டிக்கெட் டு ஃபினாலே’ பெறுவதற்காக கடுமையாக விளையாடி வருகின்றனர்.
ஆனால் அந்த விளையாட்டு எல்லையை மீறி தனிப்பட்ட தாக்குதல், வன்முறை, மரியாதையற்ற நடத்தை என மாறிவிட்டதுதான் இந்த வாரத்தின் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகளில், கம்ருதீன் மற்றும் பாரு ஆகிய இருவரும் இணைந்து செயல்பட்ட விதம் பிக் பாஸ் வீட்டையே உலுக்கி விட்டது. குறிப்பாக, டாஸ்கின் போது அவர்களுக்கும் சாண்ட்ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாக்குவாதமாக தொடங்கி, பின்னர் உடல் ரீதியான தள்ளுமுள்ளு வரை சென்றதாக கூறப்படுகிறது. இதில், சாண்ட்ராவை கார் டாஸ்கின் போது இருவரும் சேர்ந்து வெளியே தள்ளிய சம்பவம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது வெறும் ஒரு விளையாட்டு தந்திரமா, அல்லது மனிதாபிமானம் இல்லாத செயலா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.

இந்த சம்பவம் ஒளிபரப்பானதும், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்களது கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினர். குறிப்பாக, பிக் பாஸ் 7ம் சீசன் போட்டியாளரான விஷ்ணு தனது ட்விட்டர் பதிவில், “கம்ருதீன் ஜோடிக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுக்க வேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி, பலரும் அதனை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிக்க வாய்ப்பு தருவதாக கூப்பிட்டு.. முத்தம் கொடுத்த இயக்குநர்..! வேதனையில் அதிருப்தியை பகிர்ந்த நடிகை..!
இதனைத் தொடர்ந்து, சீரியல் நடிகை லட்சுமி கூறிய கருத்துகள் மேலும் சர்ச்சையை அதிகரித்தன. அவர் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தும் விதமாக, “என்னங்க இப்படி நடந்துக்குறாங்க? இவ்வளவு மோசமாகவும், வைலண்டாகவும் நடந்துக்குறது ரொம்பவே அதிர்ச்சி. ஒரு பொது வெளியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சில இப்படி நடக்குறது எவ்வளவு அசிங்கம். ஒரு பெண்ணை இன்னொரு பெண் இப்படி தள்ளிவிட முடியுமா? அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிவிட்டால் யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பேச்சு சிலருக்கு கடுமையாக தோன்றினாலும், பெரும்பாலான ரசிகர்கள் “அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது, சாண்ட்ராவின் கணவர் பிரஜின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிறகுதான்.
அவர் பேசுகையில், “டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பார்வதி அல்லது சாண்ட்ரா வென்றிருக்க வேண்டும். எனினும் இது ஒரு விளையாட்டு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் கார் டாஸ்கின் போது என் மனைவி சாண்ட்ராவை பார்வதியும், கம்ருதீனும் சேர்ந்து தள்ளியதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது” என மனவேதனையுடன் கூறினார். மேலும் அவர், “இந்த சம்பவம் குறித்து வெளியில் இருந்து எனக்கு தகவல் வந்தது.

பிக் பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனடியாக எதுவும் பேச முடியவில்லை. பிக் பாஸ் குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சாண்ட்ரா இப்போது நன்றாக இருக்கிறார் என்று கூறினார்கள். ஆனாலும் அங்கே நடந்த விஷயங்கள் நடக்கவே கூடாது. போட்டியாளர்களுக்கு என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு இருக்க வேண்டும்” என தெரிவித்தார். பிரஜின் இதோடு நிறுத்தாமல், “கம்ருதீன் மற்றும் பார்வதி தவறு செய்திருந்தால், இந்த வாரமே உரிய தண்டனை கொடுக்க வேண்டும். நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப் போகிறேன். நான் உள்ளே செல்லும் போது கம்ருதீன் இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம்.
இதை ஒரு வார்னிங்காக கூட எடுத்துக்கொள்ளலாம்” என கூறியதும், அந்த பேச்சு இணையத்தில் தீயாய் பரவியது. இந்த விவகாரம் குறித்து நடிகை ரியா தியாகராஜன், ஜாக்லின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். “விளையாட்டு என்ற பெயரில் வன்முறைக்கு இடமில்லை”, “பிக் பாஸ் வீட்டில் மனிதாபிமானம் மறைந்துவிட்டதா?” போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதே சமயம், சிலர் கம்ருதீன் மற்றும் பாருவின் செயலை “டாஸ்க் ஸ்ட்ராட்டஜி” எனவும் கூறி அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும் கவனிக்கத்தக்கது.
இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோடு மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, விஜய்சேதுபதி இந்த விவகாரம் குறித்து என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார், யாருக்கு எச்சரிக்கை, யாருக்கு தண்டனை என்ற கேள்விகளே தற்போது முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன. “இந்த வார எபிசோடில் தான் உண்மையான நீதி கிடைக்கும்” என பலரும் நம்புகின்றனர்.

ஒருபுறம் பிக் பாஸ் 9-ம் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும், மறுபுறம் இந்த சர்ச்சைகள் ஷோவின் நம்பகத்தன்மை, ஒழுக்கம், பொறுப்பு குறித்த விவாதங்களை மீண்டும் முன்வைத்து உள்ளன. இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் இன்று நடைபெறும் எபிசோடில் விஜய்சேதுபதி எடுக்கும் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'பராசக்தி' பட கதை திருட்டு விவகாரம்..! சென்னை ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு.. SK ரசிகர்கள் ரியாக்ஷன்..!