பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் உலகளாவிய இசை நிறுவனம் சோனி ம்யூசிக் ஆகியோருக்கிடையேயான நீண்டநாள் காப்புரிமை தகராறு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த காப்புரிமை வழக்கை, சோனி நிறுவனத்தின் கோரிக்கையின் பேரில் மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, இந்திய இசைத்துறையின் காப்புரிமை விவகாரங்களில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக கருதப்படுகிறது.
இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் கே. சந்திரன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணை நடைபெறும் போது, சோனி நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதித்தார்.
அவர் தனது வாதத்தில்,

மும்பை உயர்நீதிமன்றத்தில் இதே பிரச்சினையைச் சுற்றிய ஒரு உரிமையியல் வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதாகவும், அதற்கு பிறகு தான் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஒரே விவகாரம் இரண்டு நீதிமன்றங்களில் நடக்கக்கூடாது என்பதால், வழக்குகள் ஒன்றிணைந்து ஒரே நீதிமன்றத்தில் நடக்க மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கோவிலில் வெடித்த சர்ச்சை..! சேலையில் கவர்ச்சியாக வந்த நடிகை.. முடிவு கட்டிய அண்ணா ராஜன்..!
சோனி நிறுவனத்தின் இந்த கோரிக்கைக்கு எதிராக இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி பல்வேறு ஆட்சேபனைகள் முன்வைத்தார். அவர் தனது வாதத்தில், இளையராஜாவின் படைப்புகள் தமிழ் திரைப்படத் துறையைச் சார்ந்தவை என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே விசாரணை நடைபெற வேண்டியது இயல்பு எனவும்,
மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முற்றிலும் வேறு அம்சங்களை முன்வைக்கிறது, அதனை காரணம் காட்டி முழு வழக்கையும் அங்கு மாற்றுவது நியாயமல்ல எனவும் வலியுறுத்தினார். இரு தரப்பினரின் விரிவான வாதங்களை கேட்ட பிறகு, உச்சநீதிமன்றம் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதுதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்தது. இதன்படி, இளையராஜா தாக்கல் செய்த காப்புரிமை வழக்கு இனிமேல் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும். அதேபோல், சோனி ம்யூசிக் முன்பே தாக்கல் செய்திருந்த வழக்குகளும் சேர்த்து ஒரே நீதிமன்றத்தில் ஒன்றிணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த தீர்ப்பால் இசைத்துறையில் நீண்டநாள் நிலவி வந்த ‘காப்புரிமை யாருக்கு?’ என்ற கேள்வி மீண்டும் முன்வரப் போகிறது. குறிப்பாக, பழைய பாடல்களின் உரிமை - தயாரிப்பாளர்களுக்கா?, வெளியீடு செய்த இசை நிறுவனங்களுக்கா? அல்லது அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கா? என்ற சட்டப்பூர்வமான விவாதம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
இளையராஜா ஏற்கனவே பல முறை, “என் இசை என் சொத்து; என் அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக் கூடாது” என்று பொது மேடைகளில் தெரிவித்துள்ளார். சோனி ம்யூசிக் தரப்பில், அவர்கள் சட்டப்படி பெற்ற உரிமையின் அடிப்படையில் பாடல்களை வெளியிடுவதாக விளக்கப்பட்டுள்ளது.
இப்போது வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதால், இது தொடர்பான முழுமையான தீர்ப்புக்கு இன்னும் நேரம் பிடிக்கும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு, இந்திய திரைப்பட மற்றும் இசைத்துறையில் காப்புரிமை சட்டங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான புதிய வழிவகைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இளையராஜா–சோனி மோதலின் அடுத்த கட்ட விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால், இசைத்துறையினரும் ரசிகர்களும் இந்த வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.30 கோடி வசூல் சாதனை.. தன்னுடைய பாட்டை திருடிய கென்..! கானா பாடகர் தினேஷின் பரபரப்பு குற்றச்சாட்டு..!