தமிழ் இசை உலகில் “இசைஞானி” என அழைக்கப்படும் இளையராஜா ஒரு பெயர் மட்டுமல்ல, ஒரு இசை மரபு. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தமிழ்த் திரையுலகில் இசை உருவாக்கி, பல தலைமுறைகளையும் கவர்ந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவரது பெயர் பதிப்புரிமை விவகாரத்தில் மீண்டும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த “குட் பேட் அக்லீ” திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்று. படம் திரையரங்கில் வெளியானதும், பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், அதில் சில பாடல்கள் இளையராஜா அவர்களின் பழைய இசையுடன் ஒத்துப் போகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருக்க இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள், “அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாட்டுகள் இளையராஜா அவர்களின் இசையை அடிப்படையாகக் கொண்டவை. தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர் அல்லது சோனி நிறுவனம் அவரிடமிருந்து உரிமம் பெறவில்லை” என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால், படம் சில நாட்களுக்கு ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. அந்த தடை பிறகு, தயாரிப்பு நிறுவனம் மற்றும் சோனி மியூசிக் இணைந்து, அந்த இசைப்பகுதிகளில் மாற்றங்களைச் செய்து, திருத்தப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிட்டனர்.
இளையராஜா தரப்பு இதனால் சம்மதிக்காமல், வழக்கு தொடர்ந்தது சோனி நிறுவனத்தின் மீது மையப்படுத்தப்பட்டது. இப்போது வழக்கு “இளையராஜா vs சோனி மியூசிக் இந்தியா” என்ற தலைப்பில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இன்றைய விசாரணையில், இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “குட் பேட் அக்லீ மட்டும் அல்ல, ‘Dude’ என்ற மற்றொரு திரைப்படத்திலும் இளையராஜாவின் இசை பாட்டுகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்த கூற்றை கேட்ட நீதிபதி, “அந்த விவகாரம் வேறு படத்தைச் சார்ந்தது. அதற்கு தனியான வழக்கு தொடரலாம்” என்று தெரிவித்தார். இதனால், விரைவில் ‘Dude’ திரைப்படத்திற்கும் எதிராக ஒரு தனி வழக்கு தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டம் சூடுபிடிக்கனும்-னா இவங்க தான் சரி..! பிக்பாஸ் 9வது சீசனில் Wild Card என்ட்ரி.. ஹைப்பை ஏத்தும் ப்ரோமோ..!

இப்படியாக இளையராஜா தனது இசைக்கு பதிப்புரிமை அவருக்கே சொந்தம் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். கடந்த காலத்திலும் இதேபோன்ற வழக்குகள் அவர் பலமுறை தொடர்ந்துள்ளார். உதாரணமாக, “96” படத்தில் “காதலோடு” பாடலைப் பயன்படுத்திய விவகாரம், “பவர் பாண்டி” படத்தில் பழைய பாடல்கள் இணைக்கப்பட்ட விவகாரம், இவற்றிலும் அவர் தன்னுடைய பதிப்புரிமையை சட்டரீதியாக நிலைநிறுத்தினார். இளையராஜா கூறும் முக்கிய கருத்து என்னவெனில், “ஒரு இசையமைப்பாளர் தனது படைப்பை உருவாக்கும் போது, அந்த இசையின் ஆன்மா அவருக்கே சொந்தம். தயாரிப்பாளர் அல்லது நிறுவனம் பணம் கொடுத்து அந்த இசையின் காப்புரிமையை வாங்க முடியாது.
பயன்படுத்தும் ஒவ்வொரு முறைவும் அனுமதி பெற வேண்டும்.” என்றார். இது சட்ட ரீதியாக மிகவும் சிக்கலான விஷயம். இந்திய காப்புரிமை சட்டத்தின் படி, திரைப்பட இசைக்கு காப்புரிமை யாருக்கு என்பது பல வழக்குகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் தயாரிப்பாளருக்கே உரிமை எனவும், சில நேரங்களில் இசையமைப்பாளருக்கே உரிமை எனவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சோனி மியூசிக் இந்தியா தரப்பு, “நாங்கள் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையாக வாங்கியுள்ளோம். அனைத்து ஒப்பந்தங்களும் சட்டப்படி முடிக்கப்பட்டவை” என்று வாதிட்டது. அவர்கள் மேலும், “படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் நேரடி நகலல்ல, அதே ஸ்டைலில் உருவாக்கப்பட்டவை. இதனால் இது காப்புரிமை மீறல் அல்ல” இதற்கும் எதிராக, இளையராஜா தரப்பு, “பாடலின் ராக அமைப்பும், கருவி இசையும் ஒரே மாதிரியாக உள்ளது” என்று வலியுறுத்தினர்.
இளையராஜா கூறியபடி, “Dude” என்ற படத்திலும் அவருடைய இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அந்த விவகாரம் தனியாக விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் இளையராஜா மீண்டும் ஒரு முறை பதிப்புரிமை பாதுகாப்புக்கான போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார். இந்த வழக்கு குறித்து இசை உலகில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், “இளையராஜா தன் உரிமையைப் பாதுகாப்பது நியாயமானது” என கூற, மற்றவர்கள், “இது புதிய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கான சவாலாக மாறும்” எனக் கூறினர். பிரபல இசையமைப்பாளர் ஒருவர், “இளையராஜா போன்ற ஒருவரை எதிர்த்து வழக்கு நடத்துவது யாருக்குமே சுலபம் அல்ல. அவர் சட்டம், கலை, காப்புரிமை என மூன்றையும் நன்கு புரிந்தவர்” என்றார்.

ஆகவே தற்போது “இளையராஜா vs சோனி மியூசிக்” வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நிலையிலேயே உள்ளது. நீதிபதி “Dude” பட விவகாரத்துக்கு தனி வழக்கு தொடரலாம் என்று கூறியுள்ளதால், விரைவில் அந்த வழக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு இந்திய திரையுலகில் “பதிப்புரிமை – யாருக்கு?” என்ற பழைய விவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது.
இதையும் படிங்க: 5 நிமிட பாடலுக்கு..இத்தனை கோடியா..! ஒரே டான்ஸில் மொத்த சம்பளத்தையும் அள்ளிய பூஜா ஹெக்டே..!