சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘பரமசுந்தரி’ திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், படத்தில் நடித்த ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு தற்போதைய இணையதள சூழலில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. துஷார் ஜலேதா இயக்கிய இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜான்வி, படத்தில் ஒரு மலையாளப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் பேசிய மலையாளம் போன்ற தமிழ்-மலையாள கலப்புச் சொற்கள், உச்சரிப்பு பிழைகள், மற்றும் குரல் அமைப்பு குறித்த கடுமையான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவிவருகின்றன. பல மலையாள மற்றும் தென்னிந்திய ரசிகர்கள், இந்த படத்தை பார்த்த பின்னர், ஜான்வியின் உச்சரிப்பை உச்சந்தலையிலான தவறாக சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஒரு நபர், “மலையாள பெண்கள் இப்படித்தான் பேசுகிறார்களா? உணர்வு இல்லாத, சரியான சுவை இல்லாத ஒரு மொழி நடிப்பு. இது சரியான பிரதிநிதித்துவமா?” என்றார். அவரை தொடர்ந்து நடிகை பவித்ரா மேனனின் கொந்தளிப்பு கருத்தில் “பாலிவுட் எப்போதுமே நம்மை தவறாகவே காட்டும்.. பரமசுந்தரி படத்தில் ஜான்வி கபூரின் கதாப்பாத்திரம் பார்த்தது சங்கடமாக இருந்தது. உலகில் எந்தக் கதாபாத்திரத்திலும் யாரையும் நடிக்க வைக்கலாம் – அதனால்தான் அவர்களை 'நடிகர்கள்' என்கிறோம். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு பயிற்சியாளரையாவது வைத்திருக்க வேண்டாமா?..நாம் கேரளாவில் அனைவரும் பாலிவுட்டை நேசிக்கிறோம். ஷாருக்கான், கரீனா கபூர் போன்றவர்களின் படங்களில் வளர்ந்தோம். ஆனால், அவர்களிடம் இருந்து நம்மை குறித்து ஒரு உண்மையான அணுகுமுறை எப்போது வந்தது?” என்றார். பவித்ராவின் இந்த வார்த்தைகள், பல ரசிகர்களிடமிருந்து ஆதரவை பெற்றதுடன், சிலர் விமர்சனத்தையும் எழுப்பினர்.

பவித்ரா மேனன் மேலும் கூறுகையில், “இந்தி சினிமாவில் நுணுக்கம் பெரிதாக இல்லை. 10 படங்களில் 2 மட்டுமே உண்மையில் தரமானவை. மற்றவை பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை பார்த்தே எடுத்தவை. நம்மை, குறிப்பாக மலையாள நடிகைகளை, அவர்கள் எப்போதுமே தவறாகவே காட்டுகிறார்கள்.” என்றார். அவரது இந்த கருத்துக்கள், பல தென்னிந்திய சினிமா பிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பவித்ரா கேள்வி எழுப்பிய முக்கியமான விஷயம் என்னவெனில், “ஜான்வி கபூர் – ஸ்ரீதேவியின் மகள் என்பதால், அவரால் எதுவும் செய்யலாமா?, எந்த நுணுக்கமும் இல்லாமல், எந்த உணர்வும் இல்லாமல், ஒரு முழு மொழியை இப்படியொரு கதாப்பாத்திரமாக விளையாடலாமா?” என்றார். இது தொடர்பாக, பலர் வம்ச பரம்பரையின் சிறப்புப் போக்கை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: "சூப்பர் லேடி ஹீரோ" பட்டத்தை பெற்ற நடிகை கல்யாணி..! நடிகர் துல்கர் சல்மான் புகழாரம்..!
இதையடுத்து பவித்ரா மேனன், ஒரு மறு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார், அதில் “நான் ஜான்விக்கு எதிராக, தொழில் பொறாமையுடன் எதையும் சொல்லவில்லை. அவரை கேலி செய்யும் நோக்கத்திலோ, புகழ்பெற முயற்சி செய்யலோ அந்த வீடியோ இருக்கவில்லை. இது ஒரு கலாசாரப் பார்வை மட்டுமே” என்றார். இது தொடர்பாக ஜான்வி கபூர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால், பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகங்களின் பொருள், மொழி, கலாசாரம், உணர்வுகள் குறித்த அம்சங்களில் சமநிலை தேவைப்படுவதை இது மீண்டும் நினைவூட்டுகிறது. பல நடிகைகள் மற்றும் திரைத்துறையினர், “மொழிக்குப் பயிற்சி தேவையானது” என்றும், “நியாயமான பிரதிநிதித்துவம் ஒரு அடிப்படைத் தரம்” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே ‘பரமசுந்தரி’ படத்தில் ஜான்வி கபூர் செய்த மொழி தவறுகள், மற்றும் அதற்கு எதிராக பவித்ரா மேனன் எழுப்பிய கேள்விகள், இன்றைய இந்திய சினிமாவில் மாநிலங்களுக்கிடையேயான அணுகுமுறைகள், கலைஞர்களின் பொறுப்பு, மற்றும் தரமான பிரதிநிதித்துவத்தின் அவசியம் என்பவற்றை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது.

எனவே சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல.. அது ஒரு கலாசாரப் பிரதிபலிப்பு என்பதையும், அதன் உச்சரிப்பு, மனநிலை, அணுகுமுறை அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதையும் இது நம்மை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: நான் வந்துட்டல்ல.. இனிமே தான் சினிமா சூடு பிடிக்க போகுது - லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா ஓபன் டாக்..!