விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல், கடந்த சில வாரங்களாகவே ரசிகர்களை நிம்மதியாக இருக்க விடாமல், ஒவ்வொரு எபிசோடிலும் புதிய திருப்பங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ரோகிணி கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் இந்த கதை, தற்போது உச்ச கட்டத்தை எட்டியிருப்பதாக சொல்லலாம். ரோகிணியை சுற்றிய அனைத்து உண்மைகளையும் முத்து அறிந்த பிறகு, அவற்றை எப்படி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப் போகிறார் என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, இன்றைய எபிசோடு முழுவதும் அதிர்ச்சியும், உணர்ச்சி வெடிப்புகளும் நிறைந்ததாக அமைந்தது.
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி தான் கிரிஷின் அம்மா கல்யாணி என்ற முழு உண்மையை தெரிந்து கொண்ட முத்து, அதை நேரடியாக சொன்னால் ரோகிணி வழக்கம்போல் கதையை திருப்பி பேசிவிடுவாள் என்று சரியாக கணித்துவிடுகிறார். அதனால் தான், அவளின் வாயாலேயே உண்மையை வரவைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். இந்த திட்டத்தின் அடிப்படையில், முத்து ஒவ்வொரு வார்த்தையையும் மிக கவனமாக பேச ஆரம்பிக்கிறார் என்பதே இன்றைய எபிசோடின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.
இதற்கிடையில், வீட்டிற்கு வந்த மனோஜ், ஒரு பெரிய முடிவை அறிவிக்கிறார். அதாவது, கிரிஷை தத்துக்கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அவனை வெளிநாட்டில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு தத்துக்கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார். இந்த செய்தியை கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குறிப்பாக, முத்து இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் அனைவரும் இருந்தனர்.
இதையும் படிங்க: ஹோம்லி லுக்கில் கலக்கும் சிறகடிக்க ஆசை ஹீரோயின்..! நடிகை கோமதி பிரியா கிளிக்ஸ் வைரல்..!

ஆனால், அனைவரையும் அதிர வைக்கும் விதமாக, முத்து இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். “கிரிஷை வெளிநாட்டுக்கு தத்துக்கொடுத்துவிடலாம். அந்த பணத்தை வைத்து நீ உன்னுடைய கடன்களை அடைத்துக்கோ” என்று முத்து சொல்லும் போது, வீட்டில் உள்ள அனைவரும் ஷாக்கில் உறைந்துபோய் நிற்கிறார்கள். இதுவரை குழந்தை விஷயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படும் முத்து, இப்படி பேசுவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், முத்துவின் நடத்தை குறித்து அனைவருக்கும் சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.
ஆனால், முத்து இங்கேயே நிறுத்தவில்லை. அவர் ஒரு முக்கியமான கண்டிஷனையும் முன்வைக்கிறார். “கிரிஷை தத்துக்கொடுக்க வேண்டுமென்றால், அவனுடைய அம்மாவின் அனுமதி கட்டாயம் வேண்டும்” என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். “கிரிஷோட அம்மா செத்துப்போயிட்டாளே” என்று ஒரே குரலில் அனைவரும் சொல்ல, முத்து அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார். “கிரிஷோட அம்மா உயிரோட தான் இருக்காங்க” என்று சொல்வதுடன், சூழ்நிலை மேலும் பரபரப்பாகிறது.
இந்த வார்த்தைகளை கேட்டதும், ரோகிணியின் முகம் மாறுவது தெளிவாக தெரிகிறது. அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது போல ஆகிவிடுகிறது. அதன்பிறகு, முத்து திட்டமிட்டபடி கிரிஷின் அம்மாவைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். “அவள் ஒரு கேவலமானவள், அவளோட கேரக்டரே சரியில்ல” என்று தரக்குறைவாக பேசுகிறார். உண்மையில், ரோகிணியை கோபப்படுத்தி, அவளின் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்கவே முத்து இப்படி பேசுகிறார் என்பது பின்னர் தெளிவாகிறது.

முத்து இப்படி பேசுவதை கேட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். குறிப்பாக அண்ணாமலை, “நீ இப்படியெல்லாம் ஒரு பெண்ணை கொச்சையாக பேச மாட்டியே. அப்படின்னா அந்த பெண் உண்மையிலேயே அப்படிப்பட்டவளா?” என்று முத்துவிடம் கேட்கிறார். அதற்கு, “ஆமா, நான் என் கண்ணாலேயே பார்த்தேன்” என்று முத்து சொல்வதால், சூழ்நிலை இன்னும் இறுக்கமாகிறது.
இந்த வார்த்தைகள் ரோகிணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முத்துவிடம் சண்டை போட ஆரம்பிக்கிறார். “கிரிஷோட அம்மாவை பற்றி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை?” என்ற ரீதியில் ரோகிணி கோபப்பட, வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். “கிரிஷோட அம்மா நல்லவள் இல்லன்னு நான் சொல்றேன். உனக்கு எப்படி அவளைப் பற்றி இவ்வளவு தெரியும்?” என்று முத்து கேட்க, ரோகிணி மேலும் சிக்கிக்கொள்கிறார். இனி தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்த ரோகிணி, இறுதியாக உண்மையை ஒத்துக்கொள்கிறார். “கிரிஷோட அம்மாவே நான் தான்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வரி, வீட்டில் உள்ள அனைவரையும் உறைய வைத்துவிடுகிறது. விஜயாவுக்கு தூக்கி வாரிப்போட்டது போல ஆகிறது.
மனோஜ், அண்ணாமலை, மற்ற குடும்பத்தினர் அனைவரும் பேச முடியாமல் அதிர்ச்சியில் நின்று போகிறார்கள். அதன்பிறகு பேசும் முத்து, “இவளோட வாயாலேயே உண்மையை வரவைக்கணும்னு தான் இப்படி பேசினேன்” என்று சொல்லி, ரோகிணி பற்றிய முழு பின்னணியையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். “இவ பெயர் ரோகிணி இல்ல, கல்யாணி. இவளோட முதல் புருஷன் கல்யாணம் ஆன 7 மாதத்திலேயே இறந்துட்டான். அவங்களுக்கு பிறந்த குழந்தை தான் கிரிஷ். கிரிஷோட பாட்டி வேற யாருமில்ல, இவளோட அம்மா தான்” என்று புட்டு புட்டு வைக்கிறார்.

இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தாலும், இனி நடக்கப்போகும் சம்பவங்கள் இன்னும் பெரிய புயலை கிளப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோகிணியை குடும்பம் ஏற்றுக்கொள்வதா? கிரிஷின் எதிர்காலம் என்ன ஆகும்? விஜயா மற்றும் அண்ணாமலை எப்படிப் பிரதிகரிப்பார்கள்? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் நாளைய எபிசோடில் தான் தெரிய வரும். அதனால், “சிறகடிக்க ஆசை” சீரியல் நாளைய எபிசோடு பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இளசுகளை மயக்க முடிவு செய்த நடிகை மீனாட்சி சௌத்ரி..! புடவையில் மயக்கும் அழகிய போட்டோஸ்..!