தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகம் பேசப்படும், அதே நேரத்தில் மிகப் பெரிய சர்ச்சைகளுக்கும் மையமாக மாறியுள்ள திரைப்படமாக நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திகழ்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம், தற்போது தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் வெளியீடு தள்ளிப்போய், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், விஜயின் திரை வாழ்க்கையின் கடைசி படம் என்று கூறப்படுவதால், ரசிகர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே உச்சத்தில் இருந்தது. அரசியலுக்கு முழுமையாக செல்லும் முடிவை எடுத்துள்ள விஜய், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த பிறகு வெளியாகும் ஒரே படம் என்பதால், ‘ஜனநாயகன்’ ஒரு சாதாரண திரைப்படமாக அல்லாமல், ஒரு வரலாற்றுச் சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கை வாரியத்தின் ஒரு பகுதி உறுப்பினர்கள் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, படம் நேரடியாக சான்றிதழ் பெறாமல், மறுஆய்வுக் குழு பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன்.. பராசக்தி பிரச்சனைக்கு மத்தியில் ரூட் கிளியரான "வா.. வாத்தியார்"..! CBFC பார்வையில் கிடைத்த தயவு..!
இந்த தாமதத்தை எதிர்த்து, ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்துள்ள நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நாளை (ஜனவரி 9-ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஏற்கனவே பல ஆண்டுகளாக ‘தலைவா’, ‘மெர்சல்’ போன்ற விஜய் படங்கள் வெளியீட்டுக்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ள நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் வெளியிட்டுள்ள பதிவுகள், இந்த விவகாரம் வெறும் ஒரு திரைப்பட வெளியீட்டு பிரச்சனை அல்ல, தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு விவகாரம் என்ற கோணத்தில் பேசப்பட்டு வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது பதிவில், “எதுவாக இருந்தாலும் பரவாயில்ல… இந்திய சினிமாவிலேயே மிக மிக பெரிய பேர்வெலாக இது இருக்கப் போகுது” என்று கூறி, ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் நாளே மிகப் பெரிய திருவிழாவாக மாறும் என்பதை உணர்த்தியுள்ளார்.
இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. தமிழ் திரையுலகம் பெரும் ஆபத்தில் உள்ளது. மன உறுதியுடன் இருங்கள் விஜய் சார் மற்றும் ஜனநாயகன் படக்குழுவினரே. கோவிட் காலங்களில் நீங்கள் தான் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். கடைசி முறையாகவும் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் திருவிழா.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்த விவகாரத்தை இன்னும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “இது அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். ஒரு திரைப்படம் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் இதில் உள்ளது. இது தளபதியின் படம், அவருடைய கடைசி படம். அது எப்போது வெளியானாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதை நாங்கள் கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போது ரிலீஸோ, அப்போது தான் தியேட்டர் பக்கம் செல்கிறேன்”
என்று தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதில் “இது அநியாயத்தின் உச்சகட்டம். ஆனால் நீங்கள் எவ்வளவு தடைகள் போட்டாலும், விஜய் இன்னும் உயர்ந்து கொண்டே போவார். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாளே நமக்கு பொங்கல். ஜனநாயகன் வேற லெவல் பிளாக்பஸ்டர். சினிமா வரலாற்றிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவத்தை நாங்கள் செய்து காட்டுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) தனது பதிவில், “ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை. அந்த தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் தொடங்கும்” என்று விஜய்க்கு உறுதுணையாக நின்றுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில், தமிழ் சினிமாவின் மொத்த நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். அதில் “சினிமா இன்று கடினமான காலத்தில் உள்ளது. சிறிய படங்களுக்கு திரையரங்குகள் இல்லை, பெரிய படங்கள் தணிக்கை தாமதத்தால் ஒத்திவைக்கப்படுகின்றன. தணிக்கை காலக்கெடு விதிகள் சீரமைக்கப்பட வேண்டும். பிரிவுகளை விட்டு, சினிமாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் தனது பதிவில், “ஜனநாயகன் வெளியீட்டை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து தருகின்றன. நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்”
என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு சிக்கல், தற்போது ஒரு தனிப்பட்ட படத்தின் பிரச்சனையாக இல்லாமல், தமிழ் சினிமாவின் சுதந்திரம், தணிக்கை நடைமுறைகள், மற்றும் கலைஞர்களின் உரிமைகள் குறித்து பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. நாளை வெளியாகும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு, இந்த படத்தின் மட்டுமல்ல, எதிர்காலத்தில் வெளியாகும் பல திரைப்படங்களின் பாதையையும் தீர்மானிக்கும் முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. விஜயின் கடைசி படம் எப்போது திரையரங்குகளை அடையும் என்பது தெரியாத நிலையில், அந்த நாளே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உண்மையான திருவிழாவாக மாறும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: விஜயின் 'ஜனநாயகன்' படத்துக்கு சென்சார் சிக்கல்..! தமிழகம் மட்டுமல்ல சவுதிலயும் அதே பிரச்சனை..!