பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயது ரசிகர் ரேணுகாசாமி, தர்ஷனின் தோழி மற்றும் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் கூறி, கடத்தப்பட்டு பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், சிறையில் சொகுசு வசதிகளைப் பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். புகைப்படங்களில் தர்ஷன் சிகரெட் புகைத்து, காபி குடித்தபடி ரவுடிகளுடன் உரையாடுவது போல் தோன்றியது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், தர்ஷன் வீடியோ கால் மூலம் பேசியதாக வெளியான தகவல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய ராப் பாடகர் வேடன்.. கைது செய்ய கேரள ஐகோர்ட் இடைக்கால தடை..!!
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில், கர்நாடக உயர் நீதிமன்றம் தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை "விபரீதமானது" எனக் கூறி ரத்து செய்து, தர்ஷனை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, பெங்களூரு காவல்துறையினர் தர்ஷனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கில், 3,991 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தர்ஷனின் செருப்பில் ரேணுகாசாமியின் ரத்தம் இருந்தது உறுதியானது. மேலும் சிறையில் தர்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியதால் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம், "யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே" எனக் கூறி, சிறை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அதன்படி தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு இந்த முறை சலுகைகள் எதுவும் கிடைக்காமல் இருக்க சிறை அதிகாரிகள் கவனமாக உள்ளனர். தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு முன்பு நடைபாதை ஒன்று உள்ளது. அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள அவர் அனுமதிக்கப்படுகிறார்.

ஆனால் நடிகர் தர்ஷன் அந்த நடைபாதைக்கு வராமல், சிறை அறையிலேயே சுற்றித்திரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிறை ஊழியர்கள் வழங்கிய படுக்கையில் படுத்து தூங்கும் அவர், சக கைதிகளுடன் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். தினமும் அவர் செய்தித்தாள்களை படித்து நேரத்தை செலவிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகை காஜல் அகர்வாலா இது..! திருமணத்துக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாங்களே..!