இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பாற்றலால் புகழ்பெற்ற நடிகையாக திகழும் ஹூமா குரேஷி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி, அனுராக் காஷ்யப்பின் கவனத்தைப் பெற்று, 2012இல் கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது துணைக் கதாபாத்திர நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, பிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் திரையுலகில், 2018இல் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்து பிரபலமானார். மேலும், அஜித்தின் வலிமை (2022) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். அஜித்துடனான பணி அனுபவத்தை புகழ்ந்த அவர், மீண்டும் அவருடன் பணியாற்ற ஆர்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் தலைமைறைவு.. மாடல் அழகி மீரா மிதுன் எங்க சிக்கியிருக்கார் பாருங்க..!!
2023இல், ஹூமா தனது முதல் நாவலை வெளியிட்டு, எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில், கோஸ்லா கா கோஸ்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2024இல் அனிமல் படத்தை பாராட்டி, அதில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியின் ஜங்புரா பகுதியில் உள்ள போகல் பஜார் பகுதியில் பார்க்கிங் தகராறு காரணமாக நடிகை ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி (42) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிஃப், தனது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை நகர்த்துமாறு அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, இது தகராறாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, உஜ்ஜ்வல் (19) மற்றும் கௌதம் (18) ஆகியோர் ஆசிஃபை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிஃப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிஃபின் மனைவி ஷாஹீன், இது திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், முன்பு இருந்து பகைமை இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த டெல்லி காவல்துறை, இரு இளைஞர்களையும் கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஹூமா குரேஷி, இந்த துயரமான சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பார்க்கிங் போன்ற சிறிய விஷயங்கள் கூட வன்முறையாக மாறுவது, நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தையும், பொறுமையின்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது? தேசிய தேர்வுக்குழுவை விளாசிய நடிகை ஊர்வசி..!!