சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
பாரதிராஜா தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் 1977இல் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவர். அவரது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இணைத்து இயக்கினார். கிராமிய வாழ்க்கையை அழகாக சித்தரித்த அவரது படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசையில் அனைவரது மனதையும் கவர்ந்த நடிகை ப்ரீத்தாவின் அழகிய கிளிக்ஸ்..!

தொடர்ந்து 'கிழக்கே போகும் ரெயில்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பாரதிராஜா, ராதிகா, ரேவதி, கார்த்திக், ராதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இயக்குநராக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து பாராட்டு பெற்றார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா திடீர் இதயக் கோளாறால் காலமானார். இந்த சோகம் பாரதிராஜாவை மிகவும் பாதித்தது. அதன்பிறகு மலேசியாவில் உள்ள மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பினார். தற்போது 80 வயதை கடந்துள்ள நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். விரைவில் முழு நலமுடன் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லாரி கிளீனர்.. சாக்கடை கிளீனர்.. என நான் செய்யாத வேலையே இல்லை..! கண்கலங்கியபடி பேசிய நடிகர் சூரி..!