திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சாலகட்ல பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 15) கோலாகலமாகத் தொடங்குகிறது. செப்டம்பர் 23 வரை ஒன்பது நாட்கள் நீடிக்கும் இந்த விழா, அதிக மாசத்தால் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும் என்பதால் சிறப்பு வாய்ந்தது. அடுத்ததாக அக்டோபர் 12 முதல் 20 வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அலிபிரி சோதனைச் சாவடியிலிருந்து கோயில் முகப்பு வரையிலும், உள் மற்றும் வெளிப் பிரகாரங்களிலும் வண்ணமயமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டன் கணக்கில் மலர்கள் கொண்டுவரப்பட்டு, கோயில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு கண்ணைக் கவரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து, விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். அதற்கு முன் யாகசாலையில் பூமி தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்குரார்ப்பணம் எனும் மண்ணில் விதை நடும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!

முளைப்பாரி வளர்ச்சி அளவுக்கு நாடு செழிப்படையும் என்ற நம்பிக்கை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணிக்குள் மீன லக்னத்தில் தங்கக் கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்படுகிறது. இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் லோகேஷ் ஆகியோருடன் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சார்பில் வழங்கப்பட்ட மின்சாரப் பேருந்துகளையும் (சுமார் 25 எண்ணிக்கையில்) மற்றும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இரவு ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் பெத்த சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் செப்டம்பர் 19-இல் கருட சேவை, 22-இல் தேரோட்டம், 23-இல் சக்கர ஸ்நானம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு, அன்னதானம், லட்டு விநியோகம் உள்ளிட்ட ஏற்பாடுகளை முழுமையாகச் செய்துள்ளது. இந்தப் புனித விழா ஏழுமலையானின் அருளைப் பெற பக்தர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைகிறது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (14-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் கருணை மற்றும் புரிதல் அதிகம்..!!