ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரில் நகை மற்றும் பணம் தொடர்பான தகராறில், தாயை மகளும் அவரது கணவரும் சேர்ந்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தை பேரன் நேரில் பார்த்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னூரைச் சேர்ந்த வெங்கட் ராவ் - லட்சுமி தம்பதிக்கு புஷ்பலதா என்ற மகளும், சீனிவாச ராவ் என்ற மகனும் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி பல ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி, தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவரது மகன் சீனிவாச ராவ் உயிரிழந்துள்ளார். மகனை இழந்த துக்கத்தில் இருந்த லட்சுமி, மகளின் முதல் கணவருக்கு பிறந்த மகன் ஜோசுவாவுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலேரியா தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 71 பேர் பாதிப்பு… 7 வயது சிறுமி உயிரிழப்பு! ஆந்திராவில் அதிர்ச்சி
இதற்கிடையே, ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்த புஷ்பலதா, ராஜு என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தாய் வீட்டிற்கு கணவருடன் வந்து சென்ற புஷ்பலதா, நகைகள் மற்றும் பணம் தொடர்பாக தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு லட்சுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, புஷ்பலதாவும் அவரது கணவர் ராஜுவும் சேர்ந்து சேலையால் அவரது கால்களையும் கழுத்தையும் கட்டி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தை ஜோசுவா நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், சைக்கிள் வாங்கித் தருவதாகவும் ஜோசுவாவிடம் புஷ்பலதா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஜோசுவா அப்பகுதி மக்களிடம் சம்பவத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து, பொன்னூர் நகர போலீசாருக்கு தகவல் சென்றது. இன்ஸ்பெக்டர் கிஷோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள புஷ்பலதா மற்றும் ராஜுவை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை, பணம் தொடர்பான குடும்பத் தகராறு இந்த கொலைக்கு காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி! போலீஸ் விசாரணையில் பகீர்!