இந்தியாவின் மிக கொடிய கொள்ளைக்கும்பலான பவாரியா கும்பல் மீண்டும் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற இடங்களைச் சேர்ந்த இந்தக் கும்பல், கொடூரமான கொள்ளை மற்றும் கொலைகளுக்கு பெயர் பெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பவாரியா கும்பல் என்று போலீசார் அழைக்கும் இந்தக் கும்பல், 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாக இயங்கும். அவர்கள் கன்டெய்னர் லாரிகளையே வீடுகளாக மாற்றி, நெடுஞ்சாலை ஓரங்களில் தங்குவது வழக்கம். திருடப்பட்ட லாரிகளை கொள்ளைக்கும் பயன்படுத்துவர். கொள்ளை நடத்தும்போது அடையாளம் தெரியாமல் இருக்க உடலில் களிமண் அல்லது கரிய நிற எண்ணெய் பூசிக்கொள்வர்.
கும்பலில் உள்ள பெண்கள் பகலில் பிச்சை எடுப்பது போல நடித்து, பெரிய பங்களாக்களில் வசிப்பவர்களின் வீடுகளை நோட்டமிடுவர். வீட்டுச் சுவர்களில் ரகசிய குறியீடுகளை எழுதிவைத்து, ஆண்களிடம் தகவல் தெரிவிப்பர். இரவு நேரத்தில் ஆண்கள் கடப்பாரை, ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளை உடைப்பர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் விற்கப்பட்ட துப்பாக்கி!! திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! நெல்லையில் பரபரப்பு!
வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்வர். பெண்களை ஈவிரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்து கொல்வது அவர்களின் வழக்கம். தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து, சில மணி நேரங்களிலேயே சுவடு தெரியாமல் தப்பிவிடுவர்.

1995 முதல் 2005 வரை தமிழகத்தில் இக்கும்பல் பெரும் அட்டூழியம் செய்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அப்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்த சுதர்சனம் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கும்பலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். கும்பல் தலைவன் உள்பட 13 பேரை கைது செய்தனர். 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த 9 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களின் தலைமையில் புதிய உறுப்பினர்களுடன் கும்பல் மீண்டும் உருவாகியுள்ளது. தற்போது 21 பேர் கொண்ட இக்கும்பல் தமிழகத்துக்குள் அடிக்கடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை போலீஸ் வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை ஓர வீடுகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கும்பலின் மீண்டும் வருகை தமிழகத்தில் பழைய பயத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்... ஆனால்..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்..!