சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பயங்கரவாத தாக்குதலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தை காவல்துறையினர் முறியடித்துள்ளனர். செக்டார் 43 பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையம் அருகே சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பஞ்சாபின் தார்ன் தரான் பகுதியைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் (19), ஜஷன்பிரீத் சிங் (21) மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த பிரக்பிரீத் சிங் என்ற பிரப் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவர்கள் வைத்திருந்த பையில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் வெடிபொருள் தொடர்பான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், துப்பாக்கி, மேகசின் மற்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தொடர்பான பொருட்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கை முடித்து வைக்க ரூ.5 கோடி பேரம்? பஞ்சாப் முதல்வர் மனைவி மீது புகார்! நீதிபதிக்கு நோட்டீஸ்!
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும், தடை செய்யப்பட்ட பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) அமைப்புடன் தொடர்பு இருப்பதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் அந்த அமைப்புடன் தொடர்புடைய சத்னம் என்ற சத்தா நௌஷேராவுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது வழிகாட்டுதலின் பேரில் சண்டிகரில் தாக்குதல் நடத்தி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகவல்கள் அனைத்தும் தற்போது முதற்கட்ட விசாரணையின் அடிப்படையிலானவை என்பதால், முழுமையான விசாரணைக்குப் பிறகே சதித்திட்டத்தின் பின்னணி குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும்.
வெடிபொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, வெளிநாட்டில் இருந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து முனையம் அருகே வெடிகுண்டு தொடர்பான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் தொடர்புகள் மற்றும் திட்டம் குறித்து பாதுகாப்பு அமைப்புகளும் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மரக்கடை தொழிலாளி கொடூரக் கொலை! மனைவி உள்பட 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!