சென்னையில் வர்த்தகர் ஒருவரை பிரபல கொலை வழக்கில் தொடர்புபடுத்துவதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பரங்கிமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அகில்குமார் (35) என்பவர் பங்குச் சந்தை தொடர்பான தொழில் செய்து வருகிறார். அவரிடம், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெயரை சேர்த்துவிடுவதாகக் கூறி, பரங்கிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மிரட்டலின் அடிப்படையில், வர்த்தகரிடம் ரூ.40 லட்சம் பெற்றதாகவும், அதன்பிறகும் மேலும் ரூ.5 லட்சம் கேட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பணம் வழங்காவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்து கைது செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

இதனால் அதிர்ச்சி அடைந்த வர்த்தகர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, துறை ரீதியான நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் முகமது புஹாரியை காவல்துறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பணப் பரிமாற்றம் எவ்வாறு நடைபெற்றது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரி மீது பணம் பறிப்பு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்து, கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!