திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பிரபல ரவுடி செல்வமுருகன் என்ற தூத்துக்குடி செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கூட்டாளி மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பான பணம் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினையில் கூட்டாளியே செல்வத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூரை சேர்ந்தவர் செல்வமுருகன், 41. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும். ரவுடிகள் பட்டியலில் ‘ஏ பிளஸ்’ பிரிவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சில காலமாக தனது தாயாரின் சொந்த ஊரான கூடங்குளம் அருகே ஈத்தங்காட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வமுருகன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கநேரி பகுதியில் உள்ள அவரது தாயாருக்கு சொந்தமான தோட்டத்தில் செல்வமுருகன் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை! தோட்டத்தில் நடந்த பயங்கரம்... போலீஸ் தீவிர விசாரணை
இதையடுத்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வமுருகனுடன் அவரது கூட்டாளியான கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளத்தை சேர்ந்த சந்துரு சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், செல்வமுருகனை கொலை செய்ததை சந்துரு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது தனது மனைவி கவுரியும் உடன் இருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து சந்துரு, 27, மற்றும் கவுரி, 25, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சந்துருவும் செல்வமுருகனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் குளங்களை குத்தகைக்கு எடுத்து தாமரைப்பூக்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். ஒருவருக்கு சிறை செல்லும் சூழல் ஏற்பட்டால், மற்றொருவர் தொழிலை கவனித்து பண வரவு–செலவுகளை பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் குளம் ஒன்றை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செல்வமுருகன் தனது தோட்டத்திற்கு சந்துருவை அழைத்துள்ளார். சந்துரு தனது மனைவி கவுரியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கு மூவரும் மது அருந்தியதாகவும், பின்னர் கவுரி தூங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் செல்வமுருகனுக்கும் சந்துருவுக்கும் பணம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த சந்துரு அரிவாளால் செல்வமுருகனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சந்துரு மற்றும் கவுருவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பொட்டல்குளத்தில் உள்ள சந்துருவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி