பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் டீ விற்றதாகச் சொல்லும் ஊரில் ரயில்வே ஸ்டேஷனே கிடையாது; படிக்காத தற்குறி பிரதமராக இருக்கும் பாஜக ஆட்சியை விவசாயிகள் வைத்துள்ள மண்வெட்டி, கடப்பாரையைக் கொண்டு தகர்ப்போம்” என நடிகர் மன்சூர் அலிகான் காரசாரமாகப் பேசியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தைப் பாதுகாக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் நடைபெற்று வரும் கண்டனப் போராட்டத்தில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். மேடையில் மைக் பிடித்ததுமே தனது வழக்கமான பாணியில் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), ராகுல் காந்தி மற்றும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்தும் சீண்டியும் அனல் பறக்க வைத்தார்.
போராட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான், "பாஜகவினர் ஆட்டோ மீட்டருக்குச் சூடு வைப்பது போல மோசடி வேலைகளைச் செய்து வருகின்றனர். காங்கிரஸ் நல்ல நோக்கத்திற்காகக் கொண்டு வந்த EVM முறையைப் பாஜகவினர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்; எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடனே ஒழிக்க வேண்டும்" என்றார். ராகுல் காந்தி குறித்துப் பேசிய அவர், "அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, விரைவில் காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்து அவரைப் பிரதமராக்க வேண்டும்; அதற்காக டெல்லிக்குத் தனி விமானத்தில் சென்று போராடுவோம். விஜய்தான் தனி விமானத்தில் செல்வாரா? காங்கிரஸ் தொண்டர்களும் செல்வோம்" என அதிரடி காட்டினார்.
இதையும் படிங்க: 71வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் ஜெய்சங்கர்..!! பிரதமர் மோடி உருக்கமான வாழ்த்து..!!
பாஜகவின் முக்கியத் தலைவர்களைச் சாடிய அவர், "அமித்ஷா மகனுக்கு கிரிக்கெட் பேட் கூடப் பிடிக்கத் தெரியாது, ஆனால் அவர் கிரிக்கெட் வாரியத் தலைவராம்!. மகாத்மா காந்தியின் பெயரையே மாற்றும் இவர்களைத் திகார் ஜெயிலிலும், வேலூர், பாளையங்கோட்டை சிறைகளிலும் அடைக்க வேண்டும்" என ஆவேசப்பட்டார். சிறை வாழ்க்கை குறித்து வேடிக்கையாகப் பேசிய மன்சூர், "வீட்டில் இருப்பதை விடச் சிறையில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது; என் மனைவி கூட எனக்கு இரவில் பால் தருவதில்லை, ஆனால் சிறையில் தருகிறார்கள். அதனால் சிறை செல்ல யாரும் தயங்க வேண்டாம்" எனக் கூறி தொண்டர்களைச் சிரிக்க வைத்தார். "முன்னாள் பிரதமர் நேரு 12 ஆண்டுகள் சிறையில் தியாகம் செய்தார்; மோடி எந்தச் சிறைக்குச் சென்றார்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், பாஜக அரசை வீழ்த்தக் காங்கிரஸ் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முழக்கமிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்.. காரணம் இதுதான்..!! டிரம்ப் வேதனை..!!