சேலம் மாநகர் , புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது நடந்து சென்ற இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி , இன்று மாலை விரிவான விளக்கம் அளித்தார். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது மது போதையிலோ இல்லை என ஆணையர் தெரிவித்தார்.
சேலம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது நடந்து சென்ற நபர் ஒருவரை திடீரென மூன்று இளைஞர்கள் வழிமறித்து தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சுரேஷ் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் இந்த சம்பவம் மது போதையில் வந்த இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதாகவே தகவல் பரவியது.
இதனையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவின் பேரில், காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை நான்கு மணி நேரத்தில் அடையாளம் கண்ட போலீஸார், அம்மாபேட்டையை அடுத்த அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!
இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநெல்வேலியை சேர்ந்த பிரம்மநாயகம் என்ற நபர் , கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணனின் தோழி ஒருவரிடம், போலி ஐ.டி. மூலம் இன்ஸ்டாகிராமில் பழகி , அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லைகளை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த ராமகிருஷ்ணன், வினோத் குமார், பிரதீப் ராஜ் , பிரம்மநாயகத்தை எச்சரித்தும், அவர் தனது நடவடிக்கையை கண்டித்தும் உள்ளனர்.
எனினும், அந்த பெண்ணுக்கு பிரம்மநாயகம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மாணவன் ராமகிருஷ்ணன் , திட்டமிட்டு பெண் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, சுரேஷ் என்ற பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்த பிரம்மநாயகத்திடம் பழகி அவரை, சேலம் வரவழைத்துள்ளார்.
திருநெல்வேலிலிருந்து சேலம் வந்த பிரம்மநாயகத்தை ஈரடுக்கு மேம்பாலம் வழியாக வரச்செய்து, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவரை தாக்கியதோடு, இளம்பெண் தொடர்பான புகைப்படங்களை அழிக்கும் நோக்கில் செல்போனை பறித்து உடைத்துள்ளனர். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பணம் பறிக்கும் நோக்கத்திலோ அல்லது மது போதையிலோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, கல்லூரி படித்து வரும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவில்லை. மாறாக, இளைஞர்களை காவல்நிலைய பினையில் விடுவிப்பதாக தெரிவித்தார். மேலும் நெல்லையை சேர்ந்த பிரம்ம நாயகத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மக்களே அலர்ட்... சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் காத்திருக்கும் ஆபத்து... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!