கொலம்பியா (அமெரிக்கா), ஜனவரி 6: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் கொலம்பியா நகரில் வசித்து வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா கோடிஷாலா (27) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையில் தொடர்புடைய அவரது முன்னாள் காதலர் அர்ஜுன் சர்மா (26) அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி இந்தியா வந்த நிலையில், தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிகிதா கோடிஷாலா தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் 'வேதா ஹெல்த்' என்ற நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். அர்ஜுன் சர்மாவும் அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு நிகிதாவை கடைசியாக பார்த்ததாகக் கூறி, ஜனவரி 2ஆம் தேதி அர்ஜுன் சர்மா ஹோவர்டு கவுண்டி போலீசில் புகார் அளித்தார். நிகிதா காணவில்லை என்று தெரிவித்த அவர், அதே நாளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறி தப்பி ஓடினார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் வன்முறை..!! வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் சுட்டுக்கொலை..!! நிலவும் பதற்றம்..!!
போலீசார் அர்ஜுனின் நடத்தையில் சந்தேகமடைந்து, ஜனவரி 3ஆம் தேதி அவரது அடுக்குமாடி குடியிருப்பை சோதனை செய்தனர். அங்கு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நிகிதாவின் உடல் கிடந்தது. பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டது.

இதையடுத்து, அர்ஜுன் சர்மாவுக்கு எதிராக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்க உளவு அமைப்புகள் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், தமிழகத்தில் தலைமறைவாக இருந்த அர்ஜுன் சர்மா ஜனவரி 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இன்டர்போல் உதவியுடன் நடந்த இந்த நடவடிக்கையில் அவர் தீவிர கண்காணிப்புக்கு பிறகு பிடிபட்டார்.
நிகிதாவின் குடும்பத்தினர் இக்கொலைக்கு பணம் தொடர்பான பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அர்ஜுன் நிகிதாவிடம் பணம் கடன் வாங்கியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியின்றி பணம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இச்சம்பவம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்... தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!