லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து ஆபாசமாகப் பேசி கிண்டலடித்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புடான் நகரில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் நான்கு சிறுவர்கள் தொடர்ந்து வழிமறித்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தி வந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி, தனது தந்தையிடம் இதுபற்றி கூறினார். தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் உசேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: SIR ல் குளறுபடி..? மறைந்த பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் அதிர்ச்சி...!
விசாரணையில், நான்கு சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் வளாகத்தில் சுற்றித் திரிந்து வந்ததும், அடிக்கடி இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. சிறுவர்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதை (BNS) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறுவர்களின் தாய்மார்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு சிறுவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண்கள் அதே நாளில் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
உசேத் காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் பால் சிங் கூறுகையில், “சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் மீண்டும் சிறுமியைத் துன்புறுத்தியுள்ளனர். அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, இவர்கள் அடிக்கடி ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது. குழந்தைகளை சரியாக வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு. இதை பெற்றோருக்கு தெளிவாக எச்சரிக்கை செய்யும் வகையில் தாய்மார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
சிறுவர்களின் தந்தைகள் உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே வேலை செய்வதால், அவர்கள் வீடு திரும்பியதும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் சிறார்கள் மீது குற்றம் பதிவு செய்யப்படும்போது பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்புவது வழக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களின் செயலுக்கு பெற்றோரையும் பொறுப்பாக்கும் இந்த நடவடிக்கை பலரால் வரவேற்கப்பட்டாலும், சிலர் இதை விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!! இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த கொடூரம்! கோவையில் அதிர்ச்சி!