இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்குவதை உறுதி செய்யக் கோரி, 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் இணைந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
73 வயதான இம்ரான் கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அடியாலா சிறையில் அவருக்கு போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறையில் இருந்து இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவமனைக்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதித்த பின்னர், சில மணி நேரத்தில் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!
இருப்பினும், அவரது குடும்பத்தினர் சந்திப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் சர்வதேச கிரிக்கெட் உலகைச் சேர்ந்த முன்னாள் கேப்டன்கள் கூட்டாக குரல் எழுப்பியுள்ளனர்.

கடிதத்தில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவில் இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர்களையும் இணைத்து முழுமையான பரிசோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பார்வைக் குறைபாட்டை விரிவாக பரிசோதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அரசு தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்றும், மருத்துவக் குழு பரிந்துரைக்கும் சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், திலீப் வெங்சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னாள் கேப்டன்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் அல்லது சட்ட நடைமுறைகளில் தலையிடுவது தங்களது நோக்கம் அல்ல என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் உள்ள ஒருவருக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்குவது அடிப்படை மனிதநேயம் என்றும் முன்னாள் கேப்டன்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!