மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்றான சகாரா பாலைவனப் பகுதியில், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் சிக்கித் தவித்த 49 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, அண்டை நாடான மாலியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நைஜருக்கு திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் ஒரு சரக்கு லாரியில் பயணம் செய்தனர். அவர்கள் நைஜர்–அல்ஜீரியா எல்லைக்கு அருகிலுள்ள அசமகா என்ற தொலைதூர பாலைவனப் பகுதிக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி பழுதடைந்து மணற்பரப்பில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
வாகனத்தை மீண்டும் இயக்க ஓட்டுநரும் பயணிகளும் பலமுறை முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. உதவி கேட்க அருகில் குடியிருப்புகளோ, தகவல் தொடர்பு வசதிகளோ இல்லாததால் அவர்கள் பாலைவனத்தின் நடுவே சிக்கித் தவித்தனர். காலப்போக்கில் அவர்களிடம் இருந்த குறைந்தளவான உணவு மற்றும் குடிநீர் முழுவதுமாக தீர்ந்துவிட்டது.
இதையும் படிங்க: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் காலி! நைஜிரியாவில் கதை முடிப்பு! ட்ரம்ப் அறிவிப்பு!

இதனால் கொளுத்தும் வெயிலும் கடும் வெப்ப அலைகளும் தாக்கிய நிலையில், பயணிகள் தாகத்தாலும் உடல் சோர்வாலும் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழத் தொடங்கினர். இறுதியில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் கடுமையான உடல் வேதனையைத் தாங்கிக்கொண்டு சுமார் 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாலைவனத்தில் நடந்து சென்று ஒரு நீர்நிலையை கண்டுபிடித்தனர். பின்னர் அருகிலுள்ள பகுதிகளை அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பாலைவன சூழ்நிலை மற்றும் உடல்களின் நிலை காரணமாக, 49 பேரின் உடல்களும் அப்பகுதியிலேயே பொதுப் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் எல்லைப்பகுதி பயணிகள் எதிர்கொள்ளும் அபாயங்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள இந்த சம்பவம், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு வசதிகளின் அவசியத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தும் சோக நிகழ்வாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!