ஏமன் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆயுத ஏற்றுமதி கப்பலை இலக்காகக் கொண்டு சவுதி தலைமையிலான கூட்டணி வான்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, UAE தனது எஞ்சிய படைகளை ஏமனிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசியாவின் ஏமன் நாட்டில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), தனது மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், படைகள் திரும்பப் பெறப்படும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ஏமனில் கடந்த பத்தாண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையேயான இந்த மோதலில், சவுதி அரேபியாவும் யுஏஇயும் அரசுப் படைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், அரசுப் படைகளுக்குள் உருவான 'தெற்கு இடைக்கால கவுன்சில்' (எஸ்டிசி) என்ற பிரிவினைவாதக் குழு, தெற்கு யேமனை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.
இதையும் படிங்க: உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் இதுதான்..!! இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா..??
இந்தக் குழுவுக்கு யுஏஇ தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. இந்நிலையில், எஸ்டிசி தலைமையிலான படைகளுக்கு யுஏஇ சார்பில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை ஏற்றி வந்த கப்பல்கள் ஏமனின் முஹல்லா துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டிருந்தன. ஆனால், சவுதி அரேபியாவின் படைகள் இந்தக் கப்பல்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி அழித்தன. இந்தத் தாக்குதல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தப்பட்டதாக சவுதி தரப்பு கூறியது.
இருப்பினும், யுஏஇ ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏமன் அரசுப் படைகள் அவசர நிலையை அறிவித்தன. ஏற்கெனவே சவுதி அரேபியாவுக்கும் யுஏஇக்கும் இடையே இருந்த பதற்றம் இதனால் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யுஏஇயில் இருந்து வந்த கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், யுஏஇ படைகளை 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. செல்போன் கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்தப் பின்னணியில், ஏமனில் உள்ள தனது மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக யுஏஇ அறிவித்துள்ளது. இது ஏமன் போரின் போக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏமன் போரின் சிக்கலான தன்மை, பிராந்திய சக்திகளின் தலையீட்டால் மேலும் சிக்கலாகியுள்ளது. ஹவுதி குழுவினரின் தொடர்ச்சியான தாக்குதல்கள், அரசுப் படைகளின் பிரிவுகள் என அனைத்தும் போரை நீட்டித்து வருகின்றன. யுஏஇயின் இந்த முடிவு, சவுதி தலைமையிலான கூட்டணியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சர்வதேச அமைப்புகள் இதனை கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: 24 ஆண்டுகளில் இல்லாத சாதனை... பாலைவன நாட்டை நாசமாக்கும் கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய துபாய், அபுதாபி...!