சீனாவில் தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ரோபோ டாக்சிகள், மனித ஓட்டுநர்கள் இல்லாமல் செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாகனங்கள், நகரப் போக்குவரத்தை மாற்றி வருகின்றன. பைடு நிறுவனத்தின் அப்போலோ கோ (Apollo Go) மற்றும் பொனி ஏஐ (Pony AI) போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளன.
வுஹான், ஷாங்காய், சோங்கிங் போன்ற நகரங்களில் இவை வணிக ரீதியாக இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஷாங்காயின் புடாங் மாவட்டத்தில் பொனி ஏஐ நிறுவனம் முழு தானியங்கி ரோபோ டாக்சி சேவையைத் தொடங்கியுள்ளது, முதல் 3 கி.மீ.க்கு 14 யுவான் (ரூ.160) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மலிவு விலையிலும், சுத்தமான உட்புறத்துடனும் பயணிகளை ஈர்க்கிறது. பயணிகள் இசையைத் தேர்வு செய்யும் வசதி, ஓட்டுநர் இல்லாததால் தனிப்பட்ட தொடர்புகளைத் தவிர்க்கும் வாய்ப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இருப்பினும், சவால்களும் உள்ளன.
இந்நிலையில் சீனாவின் சோங்கிங் நகரில், பைடு நிறுவனத்தின் அப்போலோ கோ ரோபோ டாக்சி ஒரு பயணியுடன் சுமார் மூன்று மீட்டர் ஆழமுள்ள கட்டுமான குழியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, தானியங்கி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: நிலாவில் வசிக்கலாம் வாங்க!! நாசா மேற்கொள்ளும் சூப்பர் ப்ளான்.. 2030க்குள் சாதிக்க திட்டம்..

இந்த சம்பவத்தில், வாகனம் எச்சரிக்கை அறிகுறிகளையும் தடுப்புகளையும் புறக்கணித்து குழியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி உயிர் தப்பிய வாகனத்தில் இருந்த பெண் பயணியை சுற்றி இருந்தவர்கள் ஏணியை கொண்டு பத்திரமாக மீட்டு உள்ளனர்.
இந்த விபத்து, தானியங்கி வாகனங்களின் உயர் வரைபடங்கள் (HD Maps) புதுப்பிக்கப்படாதபோது, கட்டுமானப் பணிகள் போன்ற எதிர்பாராத சூழல்களை அவை கையாளுவதில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. பைடு நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பாதுகாப்பு மேம்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சீன அரசு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவாக விதிகளை எளிமையாக்கி வருகிறது. இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை 3.5 டிரில்லியன் யுவான் மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரோபோ டாக்சிகள் சீனாவின் போக்குவரத்து எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை முழுமையாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. உலகளவில் தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: சீனாவுக்கு வாங்க மோடி!! ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு..