பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 3 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
இதையும் படிங்க: பிணைக்கைதிகளை மீட்க இதான் ஒரேவழி!! காசாவை ஆக்கிரமிக்க ஸ்கெட்ச் போடும் இஸ்ரேல்..!
இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் காசாவுக்கு முதன்முறையாக கனடா நாடு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது. காசாவுக்கு முதன்முறையாக கனடா மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் வழங்கியுள்ளது, இது பாலஸ்தீன மக்களுக்கு உதவும் முக்கியமான முயற்சியாகும். இன்று கனடிய ஆயுதப் படைகள் CC-130J ஹெர்குலஸ் விமானத்தைப் பயன்படுத்தி சுமார் 9,800 கிலோ கிராம் (21,600 பவுண்டுகள்) உதவிப் பொருட்களை காசாவுக்கு வான்வழியாக வீசியது.
இதில் பருப்பு, எண்ணெய், பால் மற்றும் பாஸ்தா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கும். காசாவில் தற்போது நிலவும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடுகளால் நிலவழி உதவிகள் தடைபட்டுள்ள நிலையில், இந்த வான்வழி உதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதுவரை ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய 5 நாடுகள் காசாவுக்கான நிவாரண பொருட்களை கொண்டு சென்று சேர்த்து வருகின்றன. தற்போது 6-வது நாடாக கனடாவும் இதில் இணைந்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து, 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து, 1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், கனடா இதுவரை 355 மில்லியன் டாலர்களுக்கு மேல் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், இந்த உதவி மக்களின் முழு தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதல்ல என்றாலும், மனிதாபிமான அணுகலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இஸ்ரேலின் உதவி கட்டுப்பாடுகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக கனடா குற்றம்சாட்டியுள்ளது. இந்த முயற்சி, காசாவில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை விரைவாக வழங்குவதற்கு ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!