சட்டசபைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க., கட்சியை அமைப்பு ரீதியாக சீரமைக்க முக்கிய முடிவு எடுத்துள்ளது. தற்போது 78 மாவட்ட செயலர்களுடன் இயங்கி வரும் கட்சி, அவர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலரின் பொறுப்பிலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய தி.மு.க. தலைமை 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, நாளை தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன. தற்போது சில மாவட்ட செயலர்களிடம் நான்கு முதல் ஐந்து தொகுதிகள் வரை உள்ள நிலையில், இனி ஒவ்வொரு மாவட்ட செயலருக்கும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும்.
தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: “மாவட்ட செயலர்களின் கீழ் அதிக தொகுதிகள் இருந்ததால், கட்சிப் பணிகளை கிராமம் மற்றும் வார்டு அளவில் தீவிரமாக எடுத்துச் செல்ல முடியவில்லை. பல மாவட்ட செயலர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள தொகுதிகளை முழுமையாக கவனிக்கத் தவறிவிட்டனர். இதனால் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டது” என்றனர்.
இதையும் படிங்க: அப்பாவு வெற்றி..! சுப்ரீம் கோர்ட் பேச்சை மீறிய ஹைகோர்ட்..!! இன்பதுரை மேல்முறையீடு..!!

எனவே பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி, மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்துவதன் மூலம் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் மூலம் ஒவ்வொரு மாவட்ட செயலரும் தங்கள் பொறுப்பிலுள்ள தொகுதிகளில் தீவிரமாக இறங்கி பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வின் இந்த அமைப்பு ரீதியான பெரிய சீரமைப்பு, வரும் நாட்களில் கட்சியின் செயல்பாடுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மாவட்டங்கள் பிரிக்கப்படும் விவரங்கள் மற்றும் புதிய மாவட்ட செயலர்கள் நியமனம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்று, 2029 தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க. தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன SCRIPT ரெடியா முதலவரே..? அலட்சியம் அப்பட்டமா தெரியுது..! விஜயை விளாசிய திமுக..!!