டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும் அதிமுக சார்பில் பேரணி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதது., பெண்களுக்கு பாதுகாப்பின்மை; கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகிவிட்டது என்றும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இவை எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!
கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்தும், பணியாளர்கள் நலன் கருதி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 11.2.2026 புதன் கிழமை காலை 10 மணியளவில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று கண்டனக் குரல் எழுப்பி, நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மா ஆன்மா துரத்தி அடிக்குது..! சசிகலா முடிஞ்சு போன கதை..! இபிஎஸ் திட்டவட்டம்..!