வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி வகிக்கிறார்.

தொடக்கத்தில் இடைக்கால அரசுக்கு அந்நாட்டின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்து வந்தார். ஷேக்ஹசீனா ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த மாணவர் அமைப்புகள் சேர்ந்து National Citizen Party தேசிய குடிமக்கள் கட்சி எனும் கட்சியை துவங்கி, முகமது யூனுஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!
சமீப காலமாக எதிர்கட்சிகள் மற்றும் ராணுவத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் முகமது யூனுஸ் கடும் விரக்தியில் உள்ளார்.சமீபத்தில் ராணுவ தளபதியிடம் ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்க யூனுசுக்கு ராணுவ தளபதி ஜாமன் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசரக் கூட்டத்தை கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர்.
இது பிரதமர் யூனுஸூக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யூனுஸுக்கு எதிராக வங்கதேச தலைநகர் டக்காவில் தேசியவாத கட்சியும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. மாணவர்கள் அமைப்பினரும் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு முகமது யூனுஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த தகவலை மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நிஹித் இஸ்லாம் உறுதிப்படுத்தியுள்ளார். 'முகமது யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியானதும் அவரை சந்தித்தேன். ராஜினாமா செய்வது பற்றி யோசித்து வருவது உண்மைதான் என அவர் சொன்னார்.
நீண்டநேரம் ஆலோசனை நடத்தினோம். எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றன. இதுபோன்ற சூழலில் நாட்டை வழிநடத்திச் செல்வது மிகவும் கடினமான காரியம் என யூனுஸ் நினைக்கிறார். நாட்டின் நலன் கருதி தைரியமாக இருங்கள்; எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என யூனுசிடம் சொன்னேன் என, தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நிஹித் இஸ்லாம் Nhid Islam கூறினார்.

ராணுவம் மற்றும் எதிர்கட்சிகள் இரு தரப்பில் இருந்தும் தொடர்ச்சியாக நெருக்கடிகள் வருவதால், முகமது யூனுஸ் கடும் விரக்தியில் உள்ளார். அதனால்தான் ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்ததாக, வங்க தேச அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவி பிரதமர் பதவிக்கு நிகரானது. முகமது யூனுசின் ராஜினாமா முடிவால் வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஏற்படுமோ என மக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!