டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருவது சர்வதேச அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்துள்ளார். தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில், இந்தியா ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காக எண்ணெய் வாங்கவில்லை என்றும், இந்திய மக்களின் தேவைகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா தனது தேசிய மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அலிபோவ் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் எடுப்பதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: “தேசிய நலன்தான் முக்கியம்!” ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியா திட்டவட்டம்!

“குறைந்த விலையில் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முடியுமானால் வழங்கட்டும். அதற்குப் பதிலாக அழுத்தம் கொடுப்பது ஏன்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்தியாவுக்கு தேவையான அளவு எண்ணெயை தொடர்ந்து வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து விளக்கி வருகிறார். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டும் உக்ரைன் போர் முடிவுக்கு வராது என்றும், போரை முடிவுக்கு கொண்டுவர ராஜதந்திர பேச்சுவார்த்தைகளே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் ஜூலை மாதத்தைவிட 26.3 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்தே வருகிறது. இதனால், ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாக உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு அடுத்த அதிரடி! மேலும் 5 S-400 வாங்க திட்டம்!