ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வதனேனி இது குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது: “ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும். ஆனால், பாகிஸ்தானின் ராணுவ வான்வழித் தாக்குதல்கள் ஆப்கான் மக்களுக்கு பெரும் உயிரிழப்புகளையும், துன்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றன” என்றார்.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடுகளால் பொதுமக்கள் உயிரிழப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச சட்டத்தின்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் விடுத்த அழைப்புக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. மேலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

“இத்தகைய மனசாட்சியற்ற வன்முறைச் செயல்கள் ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல் ஆகும். இது பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தல்” என ஹரிஷ் பர்வதனேனி வலியுறுத்தினார். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 372 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 397 பேர் காயமடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் பெரும்பாலானோர் ரமலான் மாதத்தில் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
இந்தியாவின் இந்தக் கண்டனம் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியை சீர்குலைப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா.விலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடரும் பதற்றம் பிராந்திய அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!