சியாட்டிலின் அடையாளமாக விளங்கும் ஸ்பேஸ் நீடில் (Space Needle) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கட்டிடமாகும். 1962ஆம் ஆண்டு சியாட்டில் உலகக் கண்காட்சிக்காக (Seattle World’s Fair) கட்டப்பட்ட இந்தக் கோபுரம், 605 அடி (184 மீட்டர்) உயரம் கொண்டது. இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள மிக உயரமான கட்டமைப்புகளில் ஒன்றாகும். எட்வர்ட் இ. கார்ல்சன் மற்றும் ஜான் கிரஹாம் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இதன் தனித்துவமான வடிவம், விண்கலம் மற்றும் பறக்கும் தட்டு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 605 அடி உயரமுள்ள ஸ்பேஸ் நீடில் கோபுரத்தில், இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியாவின் தூதரக அதிகாரி பிரகாஷ் குப்தா, சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரெல் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, இந்திய-அமெரிக்க சமூகத்தின் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, இந்தியாவுக்கும் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிக்கும் இடையிலான நட்புறவை வலியுறுத்தியது. ஸ்பேஸ் நீடில் கோபுரத்தில் முதன்முறையாக வெளிநாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.
இதையும் படிங்க: புடின் என்ன பேசினார் சொல்லுங்க? அமெரிக்கா விரையும் ஜெலன்ஸ்கி.. ஆக., 18ல் டிரம்புடன் சந்திப்பு!!

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கெர்ரி பார்க்கில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்வில், ஸ்பேஸ் நீடிலில் பறக்கும் இந்தியக் கொடியைப் பின்னணியாகக் கொண்டு, இந்திய-அமெரிக்கர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் ஸ்மித், வாஷிங்டன் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டெப்ரா எல். ஸ்டீபன்ஸ், சியாட்டில் துறைமுக ஆணையர் சாம் சோ உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆடம் ஸ்மித், இந்தியக் கொடி ஏற்றம் இப்பகுதியின் பன்முகத்தன்மைக்கும், இந்திய-அமெரிக்க உறவுகளின் வலிமைக்கும் அஞ்சலி செலுத்துவதாகக் கூறினார்.
புரதநாட்டியம், தேசபக்தி பாடல்கள், மற்றும் நடிகர் பியூஷ் மிஸ்ராவின் கவிதை வாசிப்பு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தன. சியாட்டிலின் லுமென் ஸ்டேடியம், டி-மொபைல் ஸ்டேடியம், வெஸ்டின் ஹோட்டல், சியாட்டில் கிரேட் வீல் ஆகியவை இந்திய மூவண்ணங்களில் ஒளிர்ந்தன. டகோமா டோம், டகோமா நகர மண்டபம், மற்றும் டகோமா காவல் மற்றும் தீயணைப்புத் துறை தலைமையகங்களிலும் இந்தியக் கொடி ஏற்றப்பட்டது. கிங் கவுண்டி மற்றும் சியாட்டில், ஸ்போகேன், டகோமா, பெல்வ்யூ நகரங்கள் ஆகஸ்ட் 15-ஐ இந்திய தினமாக அறிவித்தன.
இதையும் படிங்க: ட்ரம்ப் வரியால் வர்த்தகமே போச்சு.. மொத்தமும் க்ளோஸ்.. மீட்டெடுங்க மோடி.. ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்..!