தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வாஷிங்டனுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தனது புதிய தாக்குதல்களுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் “ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது” என்றும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி எச்சரித்துள்ளார்.
ஈரானின் சிரிக் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை உட்பட 4 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 50 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது. பொதுமக்களை அமெரிக்க ராணுவம் ஒருபோதும் குறிவைப்பதில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் படையினர் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அமெரிக்காவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி முன்பு அழைப்பு விடுத்திருந்தார். இதன் பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜோர்டான் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத், பஹ்ரைன் பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
இந்த சூழலில், அமெரிக்கா தனது தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் பதிலடி தொடரும் என ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்ட மோதல் மேலும் தீவிரமடையுமா என்ற பதற்றம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!