அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும் மக்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை தடையின்றி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் மேற்காசியாவின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான மோதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த ஜலசந்தி வழியாக தினசரி பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சூழலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக கண்டித்ததுடன், பொருளாதார பயங்கரவாதம் என விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு திடீர் போன் செய்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்! இந்தியா–அமெரிக்க உறவில் புதிய நகர்வு!
இதற்கிடையே, அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், புதிய பொருளாதார தடைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கை மிகவும் பயனுள்ள ஆயுதமாக இருக்கும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் அணு ஆயுதம் தொடர்பான லட்சியத்தை தடுப்பதே அமெரிக்காவின் விரிவான கொள்கை நோக்கம் என்றும் வான்ஸ் கூறியுள்ளார். அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், அமெரிக்க மக்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் வழித்தடத்தில் ஏற்படும் எந்தவொரு பெரிய இடையூறும் உலகளவில் எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அமெரிக்காவின் இந்த உறுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்வு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
தட்டுப்பாடு காரணமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், ஒருபுறம் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், மறுபுறம் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல் நீடித்தால் உலக எண்ணெய் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கம் அடுத்தகட்டத்தில் மேலும் தெளிவாகும்.
இதையும் படிங்க: டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்