மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜாலில் தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருக்கும் தளபதி திருவிழா எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியும், ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையவிருக்கிறது. இது விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியாகும் திரைப்படமான ஜனநாயகனின் ப்ரொமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதே வேளையில், அவரது மூன்று தசாப்த கால சினிமா பயணத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் மரியாதை கச்சேரியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால், இந்நிகழ்வு அந்நாட்டிலேயே தேர்வு செய்யப்பட்டது. மலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இதை ஏற்பாடு செய்துள்ளது. ஏறத்தாழ 85,000 முதல் 90,000 வரையிலான ரசிகர்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு, இந்தியாவுக்கு வெளியே விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாக பதிவாகும் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி மதியம் 3.30 மணிக்கு தொடங்கி ஏறத்தாழ 10 மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி திருவிழா எனும் இசை நிகழ்ச்சியில், விஜயின் திரைப்படங்களில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் பாடப்படவுள்ளன.

இதில் ஜன நாயகன் படத்தின் பாடல்களும் அடங்கும். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தலைமையில் நடைபெறும் இக்கச்சேரியில், எஸ்.பி. சரண், விஜய் யேசுதாஸ், டிப்பு, ஹரிசரண், ஹரிஷ் ராகவேந்திரா, கிரிஷ், ஆண்ட்ரியா ஜெரமையா, ஷ்வேதா மோகன், சைந்தவி, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடவுள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! ஜன. 10 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு… அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பு…!
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் மலேசியா சென்றுள்ளார். விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இது. விஜயின் இறுதி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் மலேசியாவில் தளபதி திருவிழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை பெய்தது. இதன் காரணமாக விஐபி சீட்டில் அமர்ந்து இருக்கும் ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் விஜயின் மேகமாய் வந்து போகிறேன்., என்ற பாடல் டைமிங்கில் ஒலிக்கவே மழையோடு சேர்ந்து ரசிகர்கள் வைப் செய்தனர்.
இதையும் படிங்க: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்: இனி வாரத்தில் 2 நாட்கள் முகாம்! அமைச்சர் மா.சு. அறிவிப்பு!