நாட்டின் இளவரசியாக இருந்தாலும், மருத்துவ சிகிச்சையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படாமல் சாதாரண குடிமக்களைப் போல காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நார்வே இளவரசியின் சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய நாடான நார்வேயின் இளவரசி மெட்டே-மாரிட் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ என்ற அரிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த நோயால் நுரையீரல் திசுக்களில் வடுக்கள் உருவாகி, சுவாசிக்கும் திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இளவரசியின் உயிரைக் காப்பாற்ற நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓமனில் ஈரான் ட்ரோன் தாக்குதல்!! நீடிக்கும் பரபரப்பு!! கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம்!

ஆனால், நார்வேயின் சுகாதாரக் கொள்கையின்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூட உறுப்பு மாற்று சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படாது. இதன் காரணமாக, இளவரசி மெட்டே-மாரிட் பெயரும் பொதுமக்கள் இடம்பெறும் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தமான ரத்த வகை, திசு பொருத்தம் மற்றும் உடல் உறுப்புத் தானம் வழங்கும் நபர் கிடைக்கும் வரை அவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நார்வேயில் ஆண்டுதோறும் சுமார் 30 முதல் 35 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் பொருத்தமான கொடையாளி கிடைப்பது மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது. இளவரசியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அரச குடும்பத்தின் பல முக்கிய நிகழ்வுகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இளவரசியின் 25-வது திருமண ஆண்டு விழா உள்ளிட்ட சில முக்கிய நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கூட விதிமுறைகளில் விதிவிலக்கு அளிக்கப்படாத இந்த நடைமுறை, நார்வே நாட்டின் சமத்துவ மருத்துவ அமைப்புக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!