பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2.7 கோடி மக்கள் புதிதாக வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 7 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அரசு விரைவில் தனது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த விரிவான ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், நாணய மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் ஆகியவை பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2018-19ஆம் ஆண்டில் 21.9 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், தற்போது 28.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆறு ஆண்டுகளில் வறுமை விகிதம் சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 25.9 கோடி மக்கள் வசிக்கும் பாகிஸ்தானில், 7 கோடிக்கும் மேற்பட்டோர் அன்றாட அடிப்படை தேவைகளுக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

குறிப்பாக பலுசிஸ்தான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அந்த மாகாணத்தில் மட்டும் சுமார் 47 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பற்றாக்குறை, முதலீட்டு சரிவு மற்றும் வளர்ச்சி திட்டங்களின் மந்தநிலை போன்றவை அப்பகுதியின் பொருளாதாரத்தை பாதித்துள்ளன.
மேலும், பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதும், உணவு மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதும் பொதுமக்களின் வாங்கும் திறனை பெரிதும் குறைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேற்காசியாவில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளும் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வறுமையை கட்டுப்படுத்தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பாகிஸ்தான் அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!! பிரதமர் மோடி உச்சக்கட்ட வார்னிங்! அமைச்சர்கள் பீதி!