அமெரிக்காவின் வாஷிங்டன்னில் குவாட் அமைப்பின் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களான ஜெய்சங்கர், மார்கோ ரூபியோ, தகேஷி இவாயா, பென்னி வோங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் முதன்மையாக ஆலோசிக்கப்பட்டன. வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சும் நடந்தது. எல்லாவற்றுக்கும் மேல் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய நாடுகளை கண்டிக்க வைக்கும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அதிரடியான நடவடிக்கையால், சக்தி வாய்ந்த இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக குவாட் அமைப்பின் கூட்டறிக்கையில் கூறி இருப்பதாவது:
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடிய சம்பவத்துக்கு காரணமானவர்கள், ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள், பின்னால் இருந்து நிதி உதவி செய்தவர்கள் மீது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச சட்டம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கமிஷன் ஏற்கனவே கொண்டு வந்திருக்கும் தீர்மானங்கள் படி, இந்த விவகாரத்தில் ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமையை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்கு இடம் இன்றி குவாட் அமைப்பு கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் நாடுகளும் உறுதியாக இருக்கிறோம் என்று கூட்டறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு குவாட் நாடுகள் இரங்கல் தெரிவித்தன. அதோடு காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தன.
பாகிஸ்தானுக்கு எதிராக குவாட் மாநாட்டை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை வளத்தெடுக்கும் பாகிஸ்தானை நேரடியாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கண்டித்து இருப்பது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதே நேரம் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக சதியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. அதாவது, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈரான் உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடந்தது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதத்தை கண்டித்த ஷாங்காய் அமைப்பின் கூட்டறிக்கை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடிய தாக்குதலை கண்டிக்க தவறியது.
இதனால் அந்த அறிக்கையில் இந்தியா கையெழுத்து போடாது என்று நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கை வெளியிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தான் பார்த்த சதி வேலையை இந்தியா சாதூரியமாக முறியடித்தது. அதை தொடர்ந்து குவாட் மாநாட்டிலும் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்.. ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு இவ்ளோ வரியா..!!