தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஒப்பந்தப் பணியாளர்களை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் நியமிக்கும் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் (Overseas Manpower Corporation Limited) ஒப்படைத்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசிதழ் (Gazette Notification) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத் துறைகள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலக உதவியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் வெளி முகமைகள் மூலம் அவுட்சோர்சிங் பணியாளர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அந்தந்தத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களே தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளி (Tender) கோரி வெளி முகமைகள் மூலம் ஆட்களை நியமித்து வந்தன.

இந்நிலையில், பணியாளர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், நடைமுறைகளை முறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கும் முழுமையான பொறுப்பு சென்னை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், வெளி முகமைகள் வாயிலாக அரசுத் துறைகளுக்குத் தகுதியான பணியாளர்களை நியமிக்கத் தேவையான நம்பகமான ஒப்பந்ததாரர்களைத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ 'இ - கொள்முதல்' (e-Procurement) இணையதளம் வழியே முறைப்படி தேர்வு செய்துள்ளது.
எனவே இனிவரும் காலங்களில், அரசுத் துறைகளோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களைப் பணி அமர்த்த விரும்பினால், தனித்தனியாக டெண்டர் விடாமல் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை மட்டுமே நேரடியாக அணுகிப் பணியாளர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!