அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் கொண்டாட்டத்தை நடத்தினார். அங்கு விளக்குகளை ஏற்றி, இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறினார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்திய மக்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்! நான் இன்று உங்கள் பிரதமர் மோடியுடன் பேசினேன். நாங்கள் சிறந்த உரையாடலை நடத்தினோம். அவர் ஒரு சிறந்த மனிதர். பல ஆண்டுகளாக எனக்கு சிறந்த நண்பராக இருக்கிறார். நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம், குறிப்பாக வர்த்தகப் பிரச்னைகள் குறித்து," என்றார்.
முக்கியமாக, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக டிரம்ப் கூறியது கவனத்தை ஈர்த்தது. "இந்தியா ரஷ்ய எண்ணெயை கணிசமான அளவில் வாங்காது என்று மோடி எனக்கு உத்தரவாதம் அளித்தார். இது பெரிய மாற்றம். இப்போது சீனாவையும் இதே செய்ய வைக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, உக்ரைன் போரைத் தொடர அனுமதிக்கிறது என்று டிரம்ப் விமர்சித்து, இதன் காரணமாக இந்தியாவுக்கு 25% கூடுதல் வரி விதித்ததாகவும் நினைவூட்டினார்.
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா? பாக். பிரதமர் பேச்சுக்கு மெலானி கொடுத்த REACTION!

ஆனால், இந்திய அரசு இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், "மோடி-டிரம்ப் இன்று தொலைபேசியில் பேசவில்லை. எங்கள் எண்ணெய் கொள்முதல் முடிவுகள், பொதுமக்களின் நலன் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பொறுத்தது. இது தொடர்ந்து நடக்கும்," என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைப்பதால், இந்தியாவின் இறக்குமதி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டபோது, டிரம்ப் சிரித்துக்கொண்டே, "அவர்கள் தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பினால், பெரிய வரிகளைச் செலுத்த வேண்டும். அவர்கள் அதை விரும்பவில்லை," என்று பதிலளித்தார். இந்த சர்ச்சை, அமெரிக்க-இந்திய உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மோடி, டிரம்பின் தீபாவளி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து, "இரு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கட்டும்," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல், உலக அரங்கில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எதிரான மோடியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இது எப்படி உருவெடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: மோடி என்னோட பெஸ்ட் ப்ரண்ட்! இந்தியா சிறந்த நாடு! ஐஸ் மழை பொழியும் ட்ரம்ப்!