மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள புகித் ஜலில் தேசிய அரங்கில் இன்று நடைபெற்று வரும் "தளபதி திருவிழா" எனும் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது. நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட "ஜனநாயகன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இது நடத்தப்படுகிறது. இது வெறும் இசை வெளியீடு மட்டுமல்லாமல், விஜயின் 30 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு பெரும் இசைத் திருவிழாவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்கள் – அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி. சாரன், ஆண்ட்ரியா ஜெரமியா, ஷ்வேதா மோகன், டிப்பு, ஹரிசரண், யோகி பி உள்ளிட்டோர் விஜயின் பழைய ஹிட் பாடல்களையும் "ஜனநாயகன்" படத்தின் புதிய பாடல்களையும் பாடி ரசிகர்களை குதூகலப்படுத்துகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் நேரடியாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை அரங்கில் ஒலிக்கச் செய்கிறார்.

இரண்டாவது பகுதியில் "ஜனநாயகன்" படத்தின் இசை வெளியீடு நடைபெறும், அங்கு இயக்குநர் எச். வினோத், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உரையாற்றுவர். விஜய் தனது உரையில் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விழாவிற்கு உலகெங்கிலும் இருந்து விஜய் ரசிகர்கள் திரண்டுள்ளனர். அரங்கின் கொள்ளளவு சுமார் 85,000 முதல் 90,000 வரை என்பதால், இந்தியாவிற்கு வெளியே நடக்கும் விஜயின் மிகப்பெரிய ரசிகர் கூட்டமாக இது பதிவாகியுள்ளது. சென்னை, கோலாலம்பூர் விமான நிலையங்களில் ரசிகர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: " பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் விஜய்க்கு பாதுகாப்பு கிடையாது"... பகீர் கிளப்பும் நயினார் நாகேந்திரன்...!
விஜய் நேற்று மலேசியா சென்றடைந்த போது, விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். மலேசியாவின் தேசிய போர்க்கலை சிலாட் நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் தளபதி திருவிழா நடைபெறும் ஸ்டேடியத்திற்கு விஜய் புறப்பட்டார். கோட் சூட் அணிந்து நிகழ்ச்சிகள் விஜய் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். விஜயின் வருகைக்காக அரங்கமே வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது.
இதையும் படிங்க: “அண்ணாமலை மாதிரியே கேவலமா நீங்களும் ஓரங்கட்டப்படுவீங்க”... விஜயை எச்சரித்த திண்டுக்கல் ஐ.லியோனி...!