ஈரான் மீதான போரைத் தொடர்ந்து நடத்தவும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்யவும் அமெரிக்க ராணுவத்துக்கு 1.84 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதி தேவைப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்களுக்கான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை விரைவாக மீண்டும் உற்பத்தி செய்ய இந்த பெரும் தொகை அவசியம் என்று அமெரிக்க ராணுவம் வெள்ளை மாளிகையிடம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெறுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

ராணுவத்தின் கூற்றுப்படி, போரின் முதல் வாரத்திலேயே 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகியுள்ளது. போர் நீண்டு செல்லும் பட்சத்தில் செலவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில எம்.பி.க்கள் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “போர் ஏற்கெனவே கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. இன்னும் பல லட்சம் கோடி ரூபாயை செலவழிப்பது சரியல்ல” என்று அவர்கள் வாதிட்டுள்ளனர். சிலர், “இந்தப் பணத்தை உள்நாட்டு பிரச்சினைகளுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்தப் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே 114 டாலரைத் தொட்டுள்ளது. போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவுக்குள் போர் எதிர்ப்பு குரல்களும் வலுத்து வரும் நிலையில், 1.84 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் சூழலில், அமெரிக்க ராணுவத்தின் இந்த புதிய நிதிக் கோரிக்கை உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இடைவிடாது தாக்கும் ஈரான்!! அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு! 200க்கும் மேற்பட்டோர் காயம்!