மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் உலகின் மிகப்பெரிய மற்றும் ஆபத்தான கும்பல்களில் ஒன்றான ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் (CJNG) அமைப்பின் தலைவர் நெமெசியோ ரூபன் ஓசெகுவேரா செர்வான்டெஸ், பொதுவாக 'எல் மென்ச்சோ' என்று அழைக்கப்படுபவர், ராணுவ அதிரடி நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா என்ற சிறிய நகரத்தில் மெக்சிகோ ராணுவம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது எல் மென்ச்சோ காயமடைந்தார். அவரை மெக்சிகோ நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக மெக்சிகோ தற்காப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிரடியில் CJNG அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலவர பூமியான மெக்சிகோ... சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டு கொலை... உச்சக்கட்ட பதற்றம்...!!
அமெரிக்கா நீண்டகாலமாக எல் மென்ச்சோவைத் தேடி வந்தது. அவரைப் பிடிப்பதற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 125 கோடி ரூபாய்) வெகுமதி அறிவித்திருந்தது. CJNG அமைப்பு ஃபென்டானில் உள்ளிட்ட போதைப்பொருள்களை பெருமளவில் அமெரிக்காவுக்குக் கடத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிகவும் கொடூரமானது என அமெரிக்கா அறிவித்திருந்தது.
எல் மென்ச்சோவின் மரணம் வெளியான உடனேயே, அவரது ஆதரவாளர்களும் CJNG உறுப்பினர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் பல மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் தீ வைத்தல், சாலை மறியல்கள் (நார்கோப்ளோகியோஸ்), துப்பாக்கிச்சூடு மோதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் ஜலிஸ்கோ, கொலிமா, மிசோவாகான், நயாரிட், குவானஜுவாடோ, தமாலிபாஸ் உள்ளிட்ட பல மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தால் பள்ளிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மெக்சிகோவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகம் அவசர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள புவேர்ட்டோ வாலார்டா, சபாலா, குவாடலஜாரா போன்ற பகுதிகளிலும், தமாலிபாஸ், மிசோவாகான், கெரெரோ, நியூவோ லியோன் மாநிலங்களிலும் உள்ள இந்தியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம், பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும், அவசர உதவிக்கு தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் போராட்டத்தில் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால், CJNG அமைப்பின் பதிலடி வன்முறை நீடித்தால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் களம்..!! சசிகலா 'அம்மா அதிமுக' கட்சி அறிவிப்பு..!! 2026 தேர்தலில் எடப்பாடிக்கு பெரும் சவால்..!!