ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 33 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகவெடிப்பு மச்சைல் மாதா யாத்ரையின் தொடக்கப் புள்ளியான சஷோதி கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்த அடர்ந்த குடியிருப்புகளை கடுமையாக பாதித்தது. இதில் இரண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை (CISF) வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் காரணமாக பல வீடுகள், கடைகள் மற்றும் இரண்டு பாலங்கள் சேதமடைந்தன. மச்சைல் மாதா யாத்ரை இடைநிறுத்தப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் ராணுவம் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு குழுக்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் திடீர் மேகவெடிப்பு!! வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்கள்.. மரண ஓலம்!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுடன் பேசி, நிலைமையை கண்காணித்து, தேவையான உதவிகளை உறுதி செய்துள்ளார். ஒமர் அப்துல்லா, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம், மலைப்பகுதிகளில் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் உணர்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும், உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும் அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.

இந்த துயர சம்பவம் குறித்து மக்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவசர உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்.. எல்லையில் நீடித்த பதற்றம்.. சிதறிய தோட்டாக்கள்..