அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு இரும்பு வார்ப்பு தொழிற்சாலைக்குள் இரும்பை உருக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி திரிபுராவின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
உதர்போண்டில் உள்ள கேட் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எல்எல்பி-யின் உலோகப் பதப்படுத்தும் ஆலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சத்தம் அப்பகுதி முழுவதும் கேட்கும் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உள்ளூர்வாசிகள், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்ததையும், உடல் பாகங்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடந்ததையும் கண்டதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு அடுத்த குட்நியூஸ்... காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு வெள்ளி... தமிழக வீரர் அசத்தல்...!
வெடிவிபத்து ஏற்பட்ட உடனேயே தொழிற்சாலைக்கு விரைந்து சென்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசரகாலப் பணியாளர்கள், காயமடைந்த பல தொழிலாளர்களை மீட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், மற்றவர்கள் சிறு காயங்களுடன் பின்னர் வீடு திரும்பினர்.
திரிபுராவின் அகர்தலாவைச் சேர்ந்த அப்பு போரைக், கிரோன் முண்டா, ஷ்யாமல் கவுர் மற்றும் சாகர் நாத் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (SMCH) உள்ள மருத்துவர்கள் மரணங்களை உறுதிப்படுத்திய பின்னர், உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
"குடும்ப உறுப்பினர்களால் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது" என கச்சார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் சாய்கியா தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் படி, கேட் குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எல்.எல்.பி. நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு பல்வேறு வடிவங்களில் பெறப்படும் இரும்பை உருக்குவதற்காக 2 யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக பாங்கிராமில் அமைக்கப்பட்ட யூனிட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வார்ப்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட எல்பிஜி சிலிண்டரே வெடிப்புக்குக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலை மேலாளர் உட்பட நான்கு பேர் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!