சாய்பாசா சதார் மருத்துவமனையில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதை அடுத்து, மேற்கு சிங்பூம் மாவட்ட சிவில் சர்ஜன் சுஷாந்தோ குமார் மஞ்சி மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
ஜார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரத்தமாற்றம் செய்யப்பட்ட, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குறைந்தது ஐந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.
செப்டம்பர் 13 ஆம் தேதி இரத்தமாற்றம் செய்யப்பட்ட ஏழு வயது தலசீமியா நோயாளிக்கு அக்டோபர் 18 ஆம் தேதி நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையின் போது எச்.ஐ.வி. பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் ரத்த வங்கியில் பணியாற்றி வந்த டெக்னீசியனின் அலட்சியமே எச்.ஐ.வி. பாதிப்புக்கு காரணம் என புகார் தெரிவித்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் குழு அக்டோபர் 25 அன்று சாய்பாசாவுக்குச் சென்று மேலும் நான்கு எச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகளைக் கண்டறிந்தது, இதன் மூலம் மொத்தம் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: பத்து நாள் தான் டைம்... பக்காவா ரெடி ஆகணும்! ரோடு ஷோ விவகாரத்தில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
ஏழு முதல் எட்டு வயது வரையிலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல ஆண்டுகளாக ஒவ்வொரு 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை இரத்தமாற்றம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உள்ளூர் ரத்த வங்கி மூலம் ரத்த மாற்றம் செய்யப்படுகிறது. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் மூலமாக குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பரவி இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தரப்பில், மாசுபட்ட ஊசிகளை வெளிப்படுத்துவது உட்பட பல்வேறு வழிகள் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறுகின்றனர்.
ஆய்வுக் குழுவில் சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார், டாக்டர் ஷிப்ரா தாஸ், டாக்டர் எஸ்எஸ் பாஸ்வான், டாக்டர் பகத், மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் மஜே, டாக்டர் ஷிவ்சரண் ஹன்ஸ்தா மற்றும் டாக்டர் மினு குமாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான உண்மை காரணம் குறித்து இம்மருத்துவர்கள் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கும், மேலும் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்றும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் Vs மோடி! ஜெயிக்கப்போவது யார்? மலேசியாவில் அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கர் மீட்டிங்!