பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கு "ஜாதி - மதமற்றவர்" (Caste and Religionless) என்ற சான்றிதழை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவைச் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
பார்த்திபன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, 1958-ம் ஆண்டு பிறந்த தனக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பிறகு அதற்கான கல்விச் சான்றுகளைத் தான் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தனது ஜாதி அல்லது மதத்தை உறுதிப்படுத்தும் எந்த ஆவணமும் தற்போது தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியிலான பிளவுகள் தேசத்தின் ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தச் சான்றிதழைக் கோருவதாக அவர் கூறியுள்ளார். முதலில் வேளச்சேரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்த பார்த்திபனின் மனு, பின்னர் எல்லைப் பிரிப்பு அடிப்படையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: "தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது!" - மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!
தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், வருவாய்த் துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர். இதன் காரணமாகத் தனது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க இயலவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருவதாகப் பார்த்திபன் கூறியுள்ளார். எனவே, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தனது விண்ணப்பத்தை ஆய்வு செய்து "ஜாதி - மதமற்றவர்" என்ற சான்றிதழை வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் பார்த்திபனின் இந்தத் தனித்துவமான மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம். தண்டபாணி முன்னிலையில் நாளை (ஏப்ரல் 20, 2026) விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே சில தனிநபர்கள் இத்தகைய சான்றிதழ்களைப் பெற்றுள்ள நிலையில், ஒரு பிரபல கலைஞர் இந்த முயற்சியை எடுத்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: "பாஜகவிடம் ஏமாந்துவிடாதீர்கள்!" - முதலமைச்சர் ஸ்டாலினுக்காகக் களம் இறங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்!